Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுகிறது; காரைக்கால்-மாமல்லபுரம் இடையே 25-ல் ‘நிவர்' புயல் கரையை கடக்கும்: கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 'நிவர்' புயலாக வலுப்பெற்று, தமிழக கரையை நெருங்கி வந்து, வரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். அதன் காரண மாக தமிழக கடலோர மாவட் டங்களில் அதி கனமழையும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட் டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் சே.பாலச்சந் திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கக் கடலின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் நேற்று உரு வான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (நவ.22) தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யாக நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற் றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் புய லாகவும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும். வரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக் கூடும். இந்த புயலுக்கு 'நிவர்' என பெயரிடப் பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக 24-ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் இதர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் 25-ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும் இதர வட மாவட்டங்களில் லேசா னது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புயல் உருவாக இருப் பதையொட்டி நாளை மற்றும் 24, 25 தேதிகளில் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

புயல் உருவாக இருப்பதைத் தொடர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர் குடி யிருப்பு பகுதிகளில் மீன்வளத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை சார்பில் ஒலிபெருக்கிகள் மூலமாக கடலுக்கு செல்ல வேண் டாம் என அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு வருகின்றன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், கரோனா பரவல் தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் நிவா ரண மையங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாம் களில் தங்கவைக்க வேண்டும் என்றும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் தயார்நிலை யில் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வானிலை ஆர்வலர் கருத்து

வானிலை ஆர்வலர் தகட்டூர் ந.செல்வகுமார் கூறியதாவது:

இந்த புயல் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம்- விழுப் புரம் மாவட்டம் மரக்காணம் இடையே, குறிப்பாக மயிலாடு துறை, காரைக்கால், நாகப்பட்டி னம் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதியில் கடக்க அதிக வாய்ப்பு கள் உள்ளன. ஏனெனில் கடல் வெப்ப நீரோட்டம் அப்பகுதியில் தான் வலுவாக உள்ளது. அதன் காரணமாக அங்கு புயல் ஈர்க்கப் படவும் மேலும் வலுவடையச் செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 கிமீ வேகத்துக்கு மேல் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x