Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

காங்கிரஸ் தலைவரை மட்டுமல்ல.. கட்சி கட்டமைப்பையே மாற்ற வேண்டும்: மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தல்

தலைவரை மட்டுமல்ல, காங்கிரஸ் கட்டமைப்பையே மாற்ற வேண்டிய நேரமிது என்று கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோரும் அடக்கம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு உடைந்துவிட்டது. நாம் அந்த கட்டமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். அதன் பின் அந்த கட்டமைப்பு மூலம் ஏதேனும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படால் அது சரியாக வேலை செய்யும்.

காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பாளர்கள் யாரும் இல்லை. எதிர்ப்பாளர்கள் என்பது ஒருவரை ஒரு இடத்தில் இருந்து மாற்றி அந்த இடத்திற்கு மற்றொருவரை கொண்டுவருவது. கட்சியின் தலைவர் பதவிக்கு வேறு வேட்பாளர்கள் கிடையாது. இது எதிர்ப்பு கிடையாது. இது சீர்திருத்த நடவடிக்கை மட்டுமேயாகும்.

கட்சித் தலைவர் மட்டுமல்ல, கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்ற வேண்டிய நேரமிது.

அடிப்படைக் கட்டமைப்பு உடைந்துள்ள காங்கிரஸ் கட்சியை கட்சித் தலைமையும் தொண்டர்களும் இணைந்து மறுகட்டமைக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. தேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் இருந்து நடத்தப்படுவது இல்லை. எங்களுடைய கட்சி தலைவர்களிடம் உள்ள பிரச்சினை என்னவெனில், அவர்களுக்கு கட்சியிடம் இருந்து தேர்தலில் நிற்க சீட் கிடைத்து விட்டால், முதலில் அவர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் அறையை முன்பதிவு செய்கின்றனர்.

மோசமான சாலை இருக்கும் பக்கம் அவர்கள் போவது கூட இல்லை. இந்த கலாச்சாரம் மாறும் வரை நாம் வெற்றி பெறப் போவதில்லை. இந்த 5 நட்சத்திர ஓட்டல் கலாச்சாரத்தை எங்கள் கட்சித் தலைவர்கள் கைவிட வேண்டும். அது வரையில் நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x