Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்; தேர்தலில் வெற்றி பெற களப்பணி ஆற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திமுகவின் வெற்றிப் பயணத்தை தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம். தேர்தலில் வெற்றி பெற களப் பணி ஆற்றுவோம் என்று திமுகவினருக்கு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாகதொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதம்:

தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், மக்களின் மனக்கோட்டையில் என்றென்றும் ஆட்சி செய்து கொண்டிருப்பது திமுகதான். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக திமுக தொடர்ந்து பாடுபடுவதும், அதற்கேற்ப கட்சியின்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதும் நடந்து கொண்டே இருக்கிறது.

திமுகவின் போராட்டத்தால் மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை திமுக ஏற்கும் என்று அறிவித்த பிறகுதான், அந்தக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிக்கிறார்.

கடந்த 20-ம் தேதி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் திமுகவின் பிரச்சார பயணம் தொடங்கியது. கட்சியின் 15 முன்னணி நிர்வாகிகள் 234 பேரவைத் தொகுதிகளிலும் 75 நாட்கள் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பொதுக்கூட்டங்கள், 10 லட்சம் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 15 பேருடன் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் மஸ்தான், விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி, மகளிர் அணி துணைத் தலைவர் பவானி ராஜேந்திரன் ஆகிய 5 பேரும் இந்த பயணத்தில் இணைகின்றனர்.

அரசு விழா என்ற பெயரில் பிரச்சார கூட்டம் நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி. ஆனால், பிரச்சார பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்துவிட்டதா?

திமுகவின் வெற்றி மக்கள் மனதில் ஆழமாக பதிந்து உறுதிசெய்யப்பட்டிருப்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான், நம் மீது அவதூறுகளை பரப்ப நினைக்கின்றனர். அந்த மாய வலைகளை அறுத்தெறிவோம். அரசியல் சாணக்கியர்கள், ஊழல் இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் கொடுத்த அடியைவிட பலமான அடியை சட்டப்பேரவை தேர்தலில் வழங்குவார்கள். அந்த நம்பிக்கையுடன் திமுகவினர் களப்பணி ஆற்ற வேண்டும்.

தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் நான் நேரடியாக பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களது ஊழல்களை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களும் நமது வெற்றிப் பயணத்தைத் தடுக்க நினைக்கும்சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x