Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்டப்படுமா? பரவாக்கோட்டை பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பரவாக்கோட்டையில் தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, விரைந்து சொந்தக் கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் பரவாக் கோட்டை ஊராட்சியில் 18,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் 60 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, பரவாக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க கடந்த 2018-ம் ஆண்டு அரசு அனுமதி அளித்ததுடன், இதற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, வருவாய்த் துறை மூலம் அரசு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், விரைந்து தொடங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2019-ம் ஆண்டு தற்காலிகக் கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளை பரிசோதிக்கவும், இசிஜி எடுக்கவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆலோசனை பெறவும் தனியாக இடம் இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடத்தை விரைந்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பரவாக்கோட்டை சமூக ஆர்வலர் டி.கே.பி.லெனின் கூறியதாவது: இ-சேவை மையத்துக்கான கட்டிடத்தில், தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு பரவாக்கோட்டை மீன் மார்க்கெட் வடபுறம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டு, அங்கு செல்வதற்கான 20 அடி பாதைக்காக 5,600 சதுர அடி பரப்பளவுள்ள நிலத்தை 4 பேர் தானமாகக் கொடுத்துள்ளனர். மேலும் தேவையுள்ள நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், அரசு ஒதுக்கிய நிதி ரூ.60 லட்சம் திரும்பப் போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையம் அறிவிக்கப்பட்டபோது ஒதுக்கப்பட்ட பல பணியிடங்கள், இடப்பற்றாக்குறை காரணமாக நிரப்பப்படாமல் தற்போதுவரை காலியாகவே உள்ளன. எனவே, தமிழக முதல்வர், உணவுத் துறை அமைச்சர் ஆகியோர் வருவாய்த் துறைக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து, பாதைக்கான நிலத்தை கையகப்படுத்தி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைந்து சொந்தக் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதா கூறியதாவது:

சொந்தக் கட்டிடத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. இதற்கான பாதை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணி தாமதமாகிறது. இது தொடர்பான கோப்புகள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளன. பாதைக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x