Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

காஷ்மீரில் தீவிரவாத சதித்திட்டம் முறியடிப்பு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து கடும் கண்டனம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் தீட்டம் தீட்டியிருந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.

காஷ்மீரில் நக்ரோட்டா அருகே கடந்த 19-ம் தேதி ஜம்மு-நகர் நெடுஞ்சாலையில் நகரை நோக்கிச் சென்ற லாரியில் தீவிரவாதிகள் பயணிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த லாரியை சுற்றி வளைத்தபோது அதில் மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் மும்பை தாக்குதல் நினைவுதினத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 11 ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரிகள், பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நேற்று நேரில் அழைத்துப் பேசினர். அப்போது, தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தங்கள் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தீவிரவாத செயலை அனுமதிக்க மாட்டோம் என்ற சர்வதேச ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு உறுதிமொழியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

மசூத் அசாரின் தம்பி பயிற்சி

இந்நிலையில், இந்த தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சிகளை அளித்து, காஷ்மீரில் தாக்குதல் நடத்த அனுப்பி வைத்தது ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் தம்பி முப்தி அஸ்ஹார் என்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய விமானப்படை கடந்த ஆண்டு துல்லியத் தாக்குதல் நடத்திய பாலகோட் தீவிரவாத முகாமை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்துள்ளது. இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலைப் படை தீவிரவாதிகளுக்கு முப்தி அஸ்ஹார் அங்கு பயிற்சி அளித்து வருகிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x