Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

முதல்வர், துணை முதல்வருக்கு அமித்ஷா பாராட்டு

 சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்த தமிழக அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இந்த விழாவில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

 விழாவில் பங்கேற்ற தலைவர்கள் உட்பட அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.

 மேடையில் இருந்த முக்கியப் பிரமுகர்கள் மட்டுமின்றி, கலைவாணர் அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் அனைவரும் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.

 இந்த விழாவுக்கு பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்திருந்தனர்.

 விழா மேடைக்கு வந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 அமித்ஷா பேசும்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டியதுடன், அவர்களது வழியில் செயல்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் வெகுவாக பாராட்டினார்.

 கண்ணன்கோட்டை - தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம், 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அமித்ஷா தொடங்கிவைக்கும் போது, அந்த திட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் ஆங்கிலப் பின்னணிக் குரலில் குறும்படமாக திரையிடப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் தமிழில் சப்-டைட்டிலும் போடப்பட்டது.

 முதல்வர் பழனிசாமி ஒரு விநாயகர் சிலையையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு நடராஜர் சிலையையும் அமித்ஷாவுக்கு நினைவுப் பரிசாக வழங்கி கவுரவித்தனர்.

 தமிழகத்துக்கு மோடி அரசு எதையும் செய்யவில்லை என்று கூறி வரும் திமுகவுக்கு பகிரங்க சவால் விடுத்த அமித்ஷா, தமிழகத்துக்கு மத்திய அரசு செய்துள்ளதை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டார்.

 அதிமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் அமித்ஷா உறுதியளித்தார்.

 அதிமுக ஆட்சிக்கு பாராட்டு, திமுகவுக்கு சவால், காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு, மத்திய அரசின் சாதனைப் பட்டியல் என்று சுமார் 42 நிமிடங்கள் விறுவிறுப்பாகப் பேசி முடித்தார் அமித்ஷா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x