Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

அரசு செலவில் அரசியல் செய்யும்மத்திய, மாநில அரசுகள்: முத்தரசன் புகார்

திருநெல்வேலி: மத்திய, மாநில அரசுகள் அரசு செலவில் அரசியல் செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் புயல் பாதிப்புகளைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களை கண்டித்து, நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கரோனா தொற்று பரவக்கூடும் என்று, இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் முதல்வர் மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்கிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க 14 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் கரோனா பரவாதா?. அரசு பணத்தை செலவிட்டு மத்திய, மாநில அரசுகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி என்பதை ஏற்க முடியாது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x