Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

நாகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு கைது

நாகை அக்கரைப்பேட்டையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின்னர், அன்று மாலை விடுதலை செய்யப்பட்ட அவர் கள்ளிமேடு, வேதாரண்யம், தலைஞாயிறு, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் நேற்று நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அங்கு கூடியிருந்த மீனவர்களைச் சந்தித்து பேசினார். பின்னர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் ஏறி முகத்துவாரம் வரைசென்றார். சிறிது தூரம் விசைப்படகை அவர் ஓட்டினார்.

தொடர்ந்து துறைமுகத்துக்கு வந்த அவர், படகில் அமர்ந்தவாறு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித் ஷா, மோடிஆகியோர் கைது செய்யப்படவில்லை. ஆனால், திமுக பிரச்சாரம் செய்தால் மட்டும் கரோனாவைரஸ் தொற்று பரவும் என்றுகூறி பிரச்சாரத்தை தடை செய்கிறார்கள். முதல்வர் பழனிசாமி ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்கிறார். திமுகவின் பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு செயல்படுகிறது என்றார்.

படகில் இருந்து இறங்கிய உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். அப்போது மீனவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பிரிவினர் அக்கரைப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

கைது நடவடிக்கை குறித்துஉதயநிதி ஸ்டாலின் கூறியபோது, “காவல் துறை நெருக்கடி கொடுத்தாலும் பிரச்சாரம் தொடரும். திமுகவின் பிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு உள்ளது. நான் சென்ற இடம் எல்லாம் மக்கள் நல்ல எழுச்சியோடு வரவேற்றனர். இது ஆட்சி மாற்றத்துக்கான வரவேற்பு. பிரச்சாரத்தின் 2-ம் நாளிலும் கைது செய்யப்பட்டுள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

போலீஸ் வாகனங்களில் ஏராளமானோர் ஏற்றப்பட்டாலும் உதயநிதி ஸ்டாலின், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், மதிவாணன் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்து, நாகை பொது அலுவலக சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைத்தனர். அவர்களை இரவு 8 மணியளவில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x