Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தபால் வாக்கு முறையை கைவிட வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘கடந்த 3-10-2020-ல் அறிவிக்கப்பட்ட பிஹார் தேர்தல் நடைமுறைகளைப் போல் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பிஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மீது ராஷ்டிரிய ஜனதா தளம்முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நடுநிலையோடு பரிசீலனை செய்து பார்த்த பிறகு அங்கு பாஜக கூட்டணியின் வெற்றியே சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை மூலம் பிஹாரில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு என்ன காரணம் என்ற திரைமறைவு மர்மமும் வெளிப்பட்டு விட்டது.

வாக்காளரின் வயது வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்படுவதில்லை. அதுபோல மாற்றுத்திறனாளி என்பதை முடிவு செய்வதற்கான விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வகுக்கவில்லை. எனவே, புதிய தபால் வாக்கு முறைஎன்பது நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு வழிவகுக்காது.

போலி வாக்குகள்

புதிய தபால் வாக்கு முறையின்படி வாக்குச்சாவடி அதிகாரி, அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட80 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் வீட்டுக்குச் சென்று தபால் வாக்குப்பதிவு செய்ய வைத்து, அதை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்.புதிய தபால் வாக்கு முறையால் ரகசியமான, சுதந்திரமான வாக்கெடுப்பு முறை கேலிக்கூத்தாகி விடும். போலி வாக்குகள் பதிவுசெய்ய இந்த முறையில் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, இந்த புதிய தபால் வாக்குப் பதிவு முறையை கைவிட வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பை அளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து,அனைத்துக் கட்சிகளின் கருத்தை கேட்டறிந்த பிறகே முடிவெடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x