Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

தருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டிய கிணறுகளுக்கு வேலி தடுப்பு அமைக்க நடவடிக்கை கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் உள்ள கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் அல்லது வேலி தடுப்பு அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் ஆகிய 7 தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுகாக்கள் ஒவ்வொன்றிலும் கணிசமான நிலப்பரப்பு வனமாக உள்ளது.

இந்த வனங்களில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு, கரடி, யானை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.

இந்த வனப்பகுதிகள் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட வனச் சரகங்களாக பிரிக்கப்பட்டு தொடர்ந்து வனப்பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. வன வளத்தை இயற்கை பேரிடர் மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து காத்தல், வன வளம் மற்றும் பசுமைப் பரப்பை அதிகரித்தல், காலநிலைக்கு ஏற்ப வன விலங்குகளின் தேவைகளை அறிந்து சேவையாற்றுதல் உள்ளிட்ட பணிகளை வனத்துறையினர் மேற்கொள்கின்றனர்.

இருப்பினும், வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் நுழைந்து பயிர் சேதம் ஏற்படுத்துவது, கிணறு, மின் வேலி போன்றவற்றில் சிக்கிக் கொள்வது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து விடுகின்றன. அண்மையில், பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அருகே விவசாய கிணறு ஒன்றில் பெண் யானை தவறி விழுந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் யானை உயிருடன் மீட்கப்பட்டு வனத்துக்குள் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாயக் கிணறுகளில் இவ்வாறு வன விலங்குகள் விழுந்து ஆபத்தில் சிக்குவதைத் தடுக்கும் விதமாக கிணறுகளுக்கு தடுப்புச் சுவர் அல்லது வேலி தடுப்பு அமைக்க கணக்கெடுப்பு நடத்துமாறு வனம் மற்றும் வருவாய் துறைக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘மாவட்டம் முழுக்க வனத்துக்கு மிக அருகாமையில் உள்ள பட்டா நிலங்களிலும், அரசு நிலங்களிலும் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் கிணறுகளுக்கு வேலி போன்ற தடுப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கிணறுகளில் விழுந்து வன விலங்குகள் உயிரிழப்பது உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். முதல்கட்டமாக தீவிர கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். பின்னர் அவை வகைப்படுத்தப்படும். அவற்றில் முன்னுரிமை தேவை அடிப்படையில் நிதி சாத்தியத்துக்கு ஏற்ப வேலி தடுப்பு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x