Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

தமிழ் வளர்த்த ரஷ்ய அறிஞர் துப்யான்ஸ்கி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

ரஷ்ய தமிழ் அறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

ரஷ்யாவை சேர்ந்த தமிழ்அறிஞரும், மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆப்பிரிக்கவியல் துறை பேராசிரியருமான அலெக்ஸாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி கடந்த 18-ம் தேதி காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

துப்யான்ஸ்கி தமிழில் உள்ள அகத்துறைப் பாடல்களை ஆய்வு செய்தவர். 10-க்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளார். தமிழக பயணத்தின்போது தன் மாணவர்களையும் இங்கு அழைத்து வந்து, தமிழ் மொழி, இனம் பற்றி அறியவைத்த பெருமைக்கு உரியவர்.

உலகின் பழமையான மொழிகளுள் தமிழ் முதன்மையானது என்பதில் உறுதிகொண்டவர். தமிழ் மொழி மீது பற்றும், பாசமும் கொண்டு பல நாடுகளில் நடத்தும் கருத்தரங்குகளில் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர். தமிழில் நன்கு உரையாற்றும் வல்லமை கொண்டவர். அவரை மையமாகக் கொண்டே ரஷ்யாவில் தமிழ் ஆய்வுகள் நடைபெற்று வந்துள்ளது. சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்பு பட்டறையை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி ரஷ்யாவில் தமிழ் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டவர்.

துப்யான்ஸ்கியின் மறைவு தமிழ் அறிஞர்களுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x