Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் உண்ணாவிரத இயற்கை மருத்துவ முகாம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் உண்ணா விரத இயற்கை மருத்துவ முகாம் நடந்தது.

தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக பென்னாகரம் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நேற்று மருத்துவ முகாம் நடந்தது. பழச்சாறு மட்டுமே அருந்தி ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பதை வலியுறுத்தும் வகையில் ‘ஒருநாள் உண்ணாவிரத இயற்கை மருத்துவ முகாம்’ என்ற பெயரில் நடந்த இந்த முகாமுக்கு நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் திலகம் தலைமை வகித்தார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பென்னாகரம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் கனிமொழி வரவேற்றார். பென்னாகரம் டிஎஸ்பி மேகலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார்.

இயற்கை உணவு, யோகப் பயிற்சி உடல் நலனுக்கு எவ்வளவு பயனுள்ளதாக அமைகிறது என்பதை பற்றியும், நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுப் பொருட்கள் பற்றியும், ஒருநாள் பழச்சாறு உண்ணாவிரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் முனுசாமி விளக்கிப் பேசினார்.

மேலும், உடலில் உள்ள கழிவுகளை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்த செயல்முறை விளக்கங்களையும் அவர் அளித்தார். நாள்பட்ட உடல் கழிவுகளை வெளியேற்றுவதால் இருதய நோய் காரணிகளைக் குறைக்கலாம், ஆயுளை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ப்யூ விஷன் கிளப் நிர்வாகிகள் பசல் ரகுமான், உதயகுமார், தேவகி, சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர் பழனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x