Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

குளிர்பதன கிடங்குடன் வாழைக்காய் கொள்முதல் நிலையம் களக்காட்டில் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருநெல்வேலியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. நவம்பர் மாதம் வரை பெற வேண்டிய இயல்பான மழையளவு 703.2 மி.மீ. இந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி வரை 570.84 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இது 19 சதவீதம் குறைவு. தற்போது அணைகளில் 64.89 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 6,340 ஹெக்டேர், சிறு தானியங்கள் 330 ஹெக்டேர், பயறுவகைப் பயிர்கள் 1,048 ஹெக்டேர், பருத்தி 653 ஹெக்டேர், கரும்பு 29 ஹெக்டேர், எண்ணெய் வித்துகள் 171 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தரம் குறைந்த இடுபொருட்கள் விநியோகம் செய்தோர் மீது துறை அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விதைகள் ஆய்வு

பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்படுகின்றன. நெற்பயிருக்கு காப்பீட்டு தொகை செலுத்த டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மாவட்டத்தில் மொத்தம் 241 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இம்மாதம் வரை 1,100 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

இதில் 12 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆய்வின்போது தரக்குறைவான 9.74 மெ.டன் விதைகள் கண்டறியப்பட்டு விற் பனைக்கு தடை விதிக்கப்பட்டது என்றார்.

உரம் விலையில் குளறுபடி

விவசாயிகள் பேசியதாவது: களக்காடு வட்டாரத்தில் குளிர்பதன கிடங்குடன் வாழைக்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கடந்த 2016-2017-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு, உரிய காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

குடிமராமத்து திட்டப்பணிகளை அந்தந்த பகுதி விவசாய சங்கங்களை இணைத்து மேற்கொள்ள வேண்டும். மொத்த மாக தனியாருக்கு பணிகளை குத்தகைக்கு கொடுக்கக் கூடாது. பொட்டாஷ் உரம் 50 கிலோ ரூ.820 என்ற கட்டணத்தில் தனியார் விற்பனை செய்யும் நிலையில், கூட்டுறவு சங்கங்களில் ரூ.875-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x