Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

மெட்ரோ ரயில் உட்பட ரூ.67,378 கோடியில் புதிய திட்டங்கள் அமித் ஷா 21-ல் அடிக்கல் நாட்டுகிறார் சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

சென்னையில் வரும் 21-ம் தேதி நடக்கும் விழாவில் மெட்ரோ ரயில் திட்டம் உட்பட ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 21-ம் தேதி சென்னை வருகிறார். அப்போது தமிழக அரசின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்க் கண்டிகையில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன் பாட்டுக்கான அர்ப்பணிப்பு விழாவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2 மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சென்னை கலைவாணர் அரங்கில் நவ.21-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இதில் மத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். விழாவுக்கு முதல்வர் பழனிசாமி தலைமையேற்கிறார்.

தேர்வாய்க் கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன் பாட்டுக்கு அமித் ஷா அர்ப்பணிக்கிறார். மேலும், ரூ.61,843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள், கோவை - அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை, கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைத்தல், ரூ.309 கோடி மதிப்பில் சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பிலான பெட்ரோலியம் முனையம், ஆமுல்லைவாயலில் ரூ.1,400 கோடி மதிப்பில் லூப் பிளான்ட் அமைத்தல், காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்.

விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப் பினர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம், தொழில்துறை செயலர் என்.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கம்

மத்திய அமைச்சர் அமித் ஷா மக் களுக்கு அர்ப்பணிக்கும் தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு 1,100 ஏக்கருக்கு மேலான பரப்பில் ரூ.380 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிலம் 800 ஏக்கர் வரை கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 0.50 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். ஆந் திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை சேமிக்கும் வகையில் ஊத்துக் கோட்டையில் இருந்து தேர்வாய்க் கண்டிகைக்கு கால்வாய் அமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் முதல்கட்டமாக வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கி.மீ. மற்றும் சென்னை சென்ட்ரல் முதல் புனித தோமையார் மலை வரை 22 கி.மீ. என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பயணிகள் போக்குவரத்து தொடங்கி யுள்ளது.

தற்போது 2-ம் கட்டமாக, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை என 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.61,843 கோடி. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களிடம் நிதி பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 2026-ம் ஆண்டு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்திட்டத்துக்கான அனைத்து வழித்தடங்களிலும் மண் பரிசோதனை பணிகள் முடிவடைந் துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை வரும் அமித் ஷா, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பது குறித்தும், கூட்டணி குறித்தும் அதிமுக தலைமையுடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x