Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் இன்று தொடக்கம் தமிழக வரைவு பட்டியலில் 6.10 கோடி வாக்காளர்கள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் வரைவு வாக்காளர்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை இன்று தொடங்கி டிச.15-ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் 2021 ஜன.1-ம் தேதியை தகுதிநாளாககொண்டு 18 வயது நிரம்பியவர்களுக்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தொடங்கஅறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் நவ.16-ம் தேதி (நேற்று) வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகள், இணையதளத்தில் (www.elections.tn.gov.in) இப்பட்டியலை பார்வையிடலாம். மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370 ஆண்கள், 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 6,385 பேர் என மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர்.ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 223 பேர் அதிகம் உள்ளனர்.

அதிக வாக்காளர்கள் கொண்டசட்டப்பேரவை தொகுதி சோழிங்கநல்லூர். இங்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 366 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி கீழ்வேளூர். இங்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 107 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது தொடங்கியுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் டிச.15 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில், தகுதியான வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கலாம், நீக்கம், திருத்தம், தொகுதிக்குள் இடமாற்றம் போன்றவற்றுக்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரி, வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.

வாக்குச்சாவடிகளில் நவ.21, 22,டிச.12, 13 என சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இங்கும் விண்ணப்பங்களை அளிக்கலாம். குறிப்பிட்ட பகுதிகளில் இதற்கென நியமிக்கப்படும் அலுவலர்களிடமும் விண்ணப்பங்கள், ஆட்சேபங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகவரி, வயது சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்றாக பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், கிசான் அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வருமானவரி கணக்கு உத்தரவு, வாடகை ஒப்பந்தம், குடிநீர், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீது, அஞ்சல் கடிதம், முகவரிக்கான அஞ்சலக கடிதம் ஆகியவற்றை வழங்கலாம்.

வயது சான்றாக பிறப்புச் சான்று, 5, 8, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள பாஸ்போர்ட், பான்அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார்அட்டையை அளிக்கலாம். 25 வயதுக்கு குறைவானவர்கள் பெயர் சேர்க்க கட்டாயம் வயதுக்கான சான்றிதழ் இணைக்க வேண்டும்.

ஆன்லைனில் பெயர் சேர்க்க விரும்புவோர் www.nvsp.in அல்லது https://voterportal.eci.gov.inஅல்லது வாக்காளர் உதவி கைபேசி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்போது, வண்ண புகைப்படம் இணைக்க வேண்டும்.

புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் ஒரே தொகுதிக்குள் இருப்பிடம் மாற்றினால் படிவம் 8ஏ, தொகுதி விட்டு தொகுதி மாறியவர்கள் படிவம் 6, திருத்தம் செய்ய படிவம் 8, புதிய வாக்காளர் அட்டை பெற படிவம் 001 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் ‘6ஏ’ படிவம் மூலம் பெயர் சேர்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்தது

கடந்த பிப்.14-ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதுமுதல் நவ.1 வரை பெயர் சேர்க்க 2.45 லட்சம், நீக்கம் செய்ய 4.83 லட்சம் உட்பட 9.49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவை பரிசீலிக்கப்பட்டு, இரட்டை பதிவுகள் நீக்கப்பட்டு தற்போது 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 280 குறைந்துள்ளது.

தமிழகத்தில் 80 வயதை தாண்டிய வாக்காளர்கள் 13.75 லட்சம் பேர் உள்ளனர். கடந்த பிப்.14 முதல் நவம்பர் வரை நடைபெற்ற தொடர் வாக்காளர் பெயர் சேர்ப்பின்போது ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 8 ஆயிரத்து 413 பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x