Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

மண்ணின் ஈரப்பதத்தை காட்டும் கருவி கண்டுபிடிப்பு கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளுக்கு தேசிய விருது

மண்ணின் ஈரப்பதத்தை காட்டும் கருவியை கண்டுபிடித்ததற்காக, கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளுக்கு தேசிய விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில், 2019-ம் ஆண்டுக்கான இணையவழி தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில், கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகள் கு.ஹரி, து.புத்திர பிரதாப் , ப.முரளி, அ .ரமேஷ் சுந்தர், பா.சிங்காரவேலு ஆகியோருக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் தேசிய நீர் விருதுகளை வழங்கினர்.

இதுதொடர்பாக கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குநர் முனைவர் பக்சிராம் கூறும்போது, "பங்கேற்பு தொழில்நுட்ப உருவாக்கம் என்ற ஆராய்ச்சி முறையின் அடிப்படையில், 'மண் ஈரப்பதம் காட்டி' என்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக, கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளுக்கு தேசிய நீர் விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

எப்போது நிலத்தில் நீர்க் கட்டுவது, எப்போது நீர் பாய்ச்சாமல் விடுவது என்று முடிவெடுப்பதில் மண் ஈரப்பதம் காட்டி (Soil moisture indicator) என்ற இக்கருவி உதவி புரியும். இதில், மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து வெவ்வேறு வண்ணங்களில் விளக்குகள் ஒளிரும். ஒளிரக்கூடிய வண்ணங்கள் மூலமாக விவசாயிகள் நீர் கட்டுவதா? வேண்டாமா? என முடிவு செய்யலாம். இக்கருவியானது தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகளின் வயல்களில் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னரே வெளியிடப்பட்டது.

இதுகுறித்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கு கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைப் பணியாளர்கள் பெரிதும் துணைபுரிந்தனர். இக்கருவியைப் பயன்படுத்தி, 4 முதல் 6 முறை தண்ணீர் கட்டுவதை குறைக்கலாம். மேலும், நீர் பாய்ச்சப்பட்ட கரும்பு வயலில் ஏக்கருக்கு 60.4 டன் மகசூலும், பயன்படுத்தாத வயலில் 55.8 டன் மகசூலும் கிடைத்துள்ளது. இதன் விலை ரூ.1,500. மேலும் விவரங்களுக்கு http://sugarcane.icar.gov.in மற்றும் http://caneinfo.icar.gov.in ஆகிய இணையதளங்களைப் பார்வையிடலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x