Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

அமைச்சர் துரைக்கண்ணு இறப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவின் இறப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என்றுதமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கைகள் வெளியிட்டு மலிவான அரசியலை தொடர்ந்து செய்து வருகிறார்.

கரோனா தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கடந்த அக்.12-ம் தேதி அமைச்சர் துரைக்கண்ணு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்க்காக அவர் ஏற்கெனவே சிகிச்சைபெற்று வந்த காவேரி மருத்துவமனையில் அக்.13-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவினர், காவேரி மருத்துவமனையை தொடர்புகொண்டு உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வந்தனர். முதல்வர், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக் குழுவினரிடம் விசாரித்தனர். அக்.24 முதல் அவருக்கு நுரையீரல் பாதிப்பு 90 சதவீதமாக அதிகரித்ததால் பல முக்கிய உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. எனவே, உயிர்காக்கும் கருவி மூலம் அவரது நுரையீரல் இயக்கப்பட்டது. 25-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் எக்மோ கருவி மூலம் இதயம் இயக்கப்பட்டது. இதனால், 26, 27 தேதிகளில் துரைக்கண்ணுவின் கண் இமைகள், கை கால்களில் அசைவும் இருந்ததை மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர்.

இவ்வாறு பல்வேறு உயர்தரதொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரதுஉடல்நிலை மிகவும் மோசமடைந்து, அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்காமல் அக்.31-ம்தேதி இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, இறக்கும்வரை அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது வெளியிட்டு வந்தது.சிகிச்சை விவரங்கள், காவேரி மருத்துவமனையின் பதிவேடுகள், பிற ஆவணங்களை ஆய்வு செய்துமருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அமைச்சர் உடல்நிலை பற்றியோ, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைபற்றியோ, அரசோ, மருத்துவமனையோ எதையும் மறைக்கவில்லை.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சையில் இருந்தபோது தேவையான மருந்துகளை அரசு அளித்தது. கடவுளுக்கு நிகராக பணி செய்கின்ற நமது மருத்துவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை அமைந்துள்ளது. இதே காவேரி மருத்துவமனையில்தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சிகிச்சை பெற்றார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்தபோதிலும் அமைச்சர் இறப்பிலும் அரசியல் லாபம் தேடும் எதிர்க்கட்சித் தலைவரை தமிழகம் பெற்றுள்ளது துரதிர்ஷ்டம். அமைச்சரின் இறப்பின் மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x