Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM

‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தார் எஸ்ஏ சந்திரசேகர் lதந்தை மீது விஜய் கோபம் lதன் பெயர், கொடியை பயன்படுத்தினால் நடவடிக்கை என எச்சரிக்கை

‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் இந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், தனது பெயர், புகைப்படம், கொடியை பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை

என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் அரசியல்கட்சி தொடங்கியுள்ளார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என எனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் திட்டவட்டமாக தொிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம், அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக் கொள்கிறேன்.

மேலும், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக, எனது ரசிகர்கள் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அந்த கட்சிக்கும், நமக்கும், நமது இயக்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக் கொள்கிறேன்.

மேலும், என் பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இதுதொடர்பாக ஊடகங்கள் வழியே கூறியிருந்ததாவது:

அங்கீகாரம் கிடைக்க வேண்டும்

நான் கட்சி பதிவு செய்திருப்பது உண்மை.இந்த அமைப்பு நீண்ட ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே இதை இயக்கமாக மாற்றினேன். அந்த மக்கள் இயக்கத்தை இன்று பதிவு செய்திருக்கிறேன். விஜய்க்காக, அவரது பெயரில் நிறைய நற்பணிகள் செய்கின்றனர். அவர்களுக்கு ஓர் அங்கீகாரம்கிடைக்க வேண்டும். இந்த நோக்கத்துக்காக மட்டுமே இதை பதிவு செய்திருக்கிறேனே தவிர, வேறு எதுவும் கற்பனை செய்துவிடாதீர்கள்.

இதற்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால், அவருக்காக ரசிகர் மன்றம் ஆரம்பித்தவன் நான். அவரது முதல் ரசிகன் நான்தான். அந்த அமைப்புதான் பரிணாம வளர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு சமூக அமைப்பாக மாறியுள்ளது. இதன்மூலம் அரசியலில் நிற்கப் போகிறேன் என்றெல்லாம் கிடையாது. நல்லது பண்ண வேண்டும் அவ்வளவுதான்.

விஜய்க்காக நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அவர் ஒப்புக் கொள்கிறாரா இல்லையா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு பிடித்த ஒரு நடிகரை வைத்து நான் செய்துகொண்டிருக்கிறேன். இதில் விஜய் இணைவாரா, இல்லையா என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்.

இவ்வாறு எஸ்ஏசி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அரசியல் கட்சிக்கான பதிவு விண்ணப்பத்தில் கட்சித் தலைவர் பத்மநாபன், பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x