Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

எனக்கு எதிராக சுவரொட்டி ஒட்டுபவர்களுக்கு மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தனக்கு எதிராக முகவரியற்ற சுவரொட்டி ஒட்டுபவர்களுக்கு பொதுமக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பெயர், முகவரி வெளியிட துணிவு இல்லாதவர்களால் தமிழகத்தில் சில சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. முதல்வர் பழனிசாமியை புகழ்ந்தும், எதிர்க்கட்சித் தலைவரான என்னை இகழ்ந்தும் வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகத்தில் விமர்சனம் ஆரோக்கியமாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்.

தகுதி இல்லாத சில நபர்களால் போகிற போக்கில் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்படுவது அவற்றில் இடம்பெற்றுள்ள வாசகங்களில் இருந்து தெரிகிறது.

முகவரியற்ற சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்யஎந்த மாவட்ட காவல்துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம் ஆட்சியாளர்களின் ஆதரவுடன்தான் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுவது தெரிகிறது. இந்தியக் குற்றவியல் சட்டம், புத்தகங்கள் பதிவுச் சட்டம்,இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை தரத்தக்க குற்றங்கள் இவை. பலமாவட்டங்களில் இந்த சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழித்துவருகின்றனர். அச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தன்னை அவதூறு செய்து வைக்கப்பட்ட பேனரை இரவிலும் படிக்க வசதியாக விளக்கை பொருத்தி வைத்தவர் அண்ணா. அந்த வழியில் வந்த நாம் 'வாழ்கவசவாளர்கள்' என்று வாழ்த்துவோம். திமுகவின் வெற்றி உறுதி என்பதால் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

திமுகவினர் இப்போது பொறுமை காக்க வேண்டும். ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பது முதுமொழி. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்பது வள்ளுவம். ஆட்சிக்கு முற்றிலும் எதிரான தமிழ் மக்களின் மனநிலையை மாற்ற என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். எதுவும் பயன் தரவில்லை என்பதால், இப்போது சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். ஒட்டுகிறவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மக்கள் ஓடஓடவிரட்டியடிக்கப் போகிறார்கள்.

இதுபோன்ற அநாமதேய சுவரொட்டிகள் தொடருமானால் தமிழ் மக்கள் மன்றம் வழங்கப் போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x