Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டு ஆட்சி ட்ரம்ப்புக்கும் - பைடனுக்கும் இன்று மிகப்பெரிய நாள்: அதிபர் தேர்தல் முடிவுகள் சர்ச்சையின்றி வெளியாகுமா?

ஜோ பைடன்

அமெரிக்காவில் கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. அடுத்த 4 ஆண்டுகள் யார் ஆட்சி செய்யப் போகிறார் என்பதை நிர்ணயிக்கும் அந்த நாள். அதிபர் தேர்தல் களத்தில் இருக்கும் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் - முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கும் இன்றுதான் மிகப்பெரிய நாள். ஆமாம்... இன்றுதான் அமெரிக்க அதிபர் தேர்தல்.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களத்தில் நிற்கிறார். ‘அமெரிக்காவின் நலனுக்கு நான்தான் மிகச் சிறந்தவன்’ என்ற ட்ரம்ப்பின் மதிப்பீட்டை நீங்கள் ஏற்காவிட்டால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரைப் போலவே நீங்களும் ஒன்று அமெரிக்கராக இருக்க மாட்டீர்கள் அல்லது கம்யூனிஸ்டாக இருப்பீர்கள். இதுதான் தனி ஒரு மனிதருக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையில் நடக்கும் 2020 தேர்தலாக உள்ளது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் கருத்துப்படி, அமெரிக்காவின் மதிப்பு மற்றும் கொள்கைகள் அபாயத்தில் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆபத்து உள்ளது. அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் நலனைக் காட்டிலும், தனிப்பட்ட நலனுக்கானதாக மாறிவிட்டது என்பது அவருடைய குற்றச்சாட்டு.

இந்த நவம்பர் மாதம் தேர்தல் நடப்பதற்கு பதில், கடந்த பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தேர்தல் நடந்திருந்தால், மிகப் பெரும் வித்தியாசத்தில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பார். அதில் சந்தேகமே இல்லை. அமெரிக்க பொருளாதாரம் அப்போது நன்றாக இருந்தது. அமெரிக்காவுக்கு நல்ல எதிர்காலம் இருந்தது.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலை காணப்பட்டது. இதுதான் குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், ‘அதிபர் டிரம்ப்பும் அவரது குழுவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பலவீனமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன’ என்று விமர்சனங்கள் எழுந்தாலும் கூட, அந்த விஷயத்தில் குடியரசுக் கட்சி நிர்வாகம் வெற்றி பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க அமெரிக்கர்கள் கொண்டிருந்த எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தவிட்டதாகவே தெரிகிறது. அதற்கு காரணம் கரோனா வைரஸ். கரோனா வைரஸ் விவகாரத்தை சாதாரணமாக கையாண்ட விதத்தால், அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்மைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். ‘கோவிட்’ என்ற வார்த்தையை ட்ரம்ப் விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பிப்ரவரியில் இருந்து அக்டோபர் இறுதிக்குள் அமெரிக்காவில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த வைரஸால் உயிரிழந்துவிட்டனர். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களிலும் சேர்த்து 8.5 மில்லியன் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுவிட்டனர். தற்போதுள்ள நிலையை வைத்து 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் அமெரிக்காவில் 5 லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஜோ பைடன் கேள்வி எழுப்பி விவாதம் நடத்தினார். அதிபர் ட்ரம்ப்பும் அவரது நிர்வாகமும் விரைந்து தீர்வுக்கான நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு எண்ணிக்கையில் உயிரிழப்பு நேர்திருக்காது என்பது பைடனின் வாதம். மேலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் ட்ரம்ப். அப்போது கூட, முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற விஷயங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுக்கவில்லை. அதற்கு மாறாக சீனாவை தொடர்ந்து குற்றம் சாட்டுவதிலேயே கவனமாக இருந்தார். அதைவிட, முகக் கவசம் அணிபவர்களை ட்ரம்ப் கேலி செய்தார். வெள்ளை மாளிகையின் புல்வெளி உட்பட பல இடங்களில் ஏராளமானோர் கூடும் வகையில் கூட்டங்கள் நடத்த ஊக்கம் அளித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில்தான், கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை அவ்வளவு எளிதாக அசைக்க முடியாது என்று ட்ரம்ப் கண்டுகொண்டார். அதேநேரத்தில் பைடனின் பிரச்சாரம், வாக்காளர்களை நம்ப வைப்பதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியும் கண்டுள்ளது.

‘ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, ஜனநாயகக் கட்சியினர் உருவாக்கிய பிம்பம்தான் கரோனா வைரஸ்’ என்று அதிபர் ட்ரம்ப் செய்த பிரச்சாரங்கள் எடுபடவில்லை. அமெரிக்கர்கள் கவலையில் உள்ளனர் என்பது கடந்த 8 வாரங்களில் தெளிவாக தெரிந்தது. ட்ரம்ப்புக்குள்ள வாக்கு வங்கி சுருங்கி வருவதை காண முடிகிறது. உண்மை நிலவரம் என்னவென்பதைப் பலர் புரிந்து கொண்டுள்ளனர். குறிப்பாக கரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் தற்போது பதவியில் இருக்கும் குடியரசுக் கட்சியினர் அடுத்த 4 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், கட்டாயம் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்.

ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. ஆனால், 10-ல் 8 கணிப்புகள் பைடனுக்கு ஆதரவாக உள்ளன. கரோனா வைரஸ் அதிகம் பாதித்துள்ள புளோரிடா, மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா போன்ற மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்கெனவே 75 மில்லியன் வாக்காளர்கள் வாக்கு செலுத்திவிட்டனர். இது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகம் மட்டுமல்ல, மக்களின் திடமான முடிவையும் காட்டுவதாக உள்ளது. ஆனால், தற்போதைக்கு குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் பலர் மிகப்பெரிய கவலையில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் நாளை அதிகாலை வெளிவருமா என்பதுதான் அந்தக் கவலை. ஏனெனில், தேர்தல் முடிவுகள் நீதிமன்றம் வரை இழுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.

நீதிமன்றம் வரை தேர்தல் முடிவு குறித்த சர்ச்சை செல்லாமல் இருக்க வேண்டுமானால், ஜோ பைடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற விவாதம் தற்போது நடைபெறுகிறது. அதைவிட மிகப்பெரிய கேள்வி இப்போது இன்னொன்று உள்ளது. ஒருவேளை ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால், அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து மனதார வெளியேறுவாரா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x