Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

சிஎஸ்கே வெற்றியால் பிளே ஆஃப் சுற்றில் முதலில் நுழைந்தது மும்பை மீதமுள்ள 3 இடங்களை பிடிக்க கடும் போட்டி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) வெற்றி பெற்றதால் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.

ஐபிஎல் டி20 தொடரில் நேற்றுமுன்தினம் துபாயில் கொல்கத்தாஅணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 173 ரன்கள் இலக்கை துரத்தியசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில், 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் விளாசினார். இறுதிக் கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா11 பந்துகளில் 31 ரன்கள் விளாசியதால் வெற்றி சாத்தியமானது.

சிஎஸ்கேயின் இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் மும்பையைத் தவிர 4 அணிகள்அதிகபட்சமாக 16 புள்ளிகளை பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. எனினும் ரன்ரேட்டை ( 1.86)அதிகம் வைத்துள்ளதால் மும்பைஅணிக்கு தனது எஞ்சிய ஆட்டத்தின் முடிவுகளும், மற்ற ஆட்டத்தின் முடிவுகளும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில் மீதமுள்ள 3 இடங்களை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. சென்னையிடம் தோல்வி அடைந்துள்ளதால் கொல்கத்தா அணிபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமாகி உள்ளது. 12 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா தனதுகடைசி லீக் ஆட்டத்தில் நாளை(நவ.1) ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றாலும் கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் கனவு மற்ற அணிகளின்வெற்றி, தோல்வியை கருத்தில் கொண்டே நனவாகும். அதாவதுபஞ்சாப் அணி தனது கடைசி 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைய வேண்டும்.

மேலும் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தங்களது கடைசி 2 ஆட்டங்களில் ஒன்றுக்கு மேல் வெற்றி பெறக் கூடாது. இந்த நிலை ஏற்பட்டால் கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் 4-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறக் கூடும். ஒருவேளை நெட் ரன்ரேட் பிரச்சினை வந்தால் கொல்கத்தா அணி (-0.467), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் (-0.505) தான் மல்லுக்கட்டும் நிலை உருவாகும். 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் நெட் ரன்ரேட்டை உயர்த்துவது அவசியம்.

பஞ்சாப்: கொல்கத்தா அணியின் தோல்வியானது மற்ற அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுவாய்ப்புக்கான கதவை திறந்துவிட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது பஞ்சாப் அணி. 12 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிடும். மாறாக ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்து 14 புள்ளிகளை பெற்றால் கூட நெட் ரன்ரேட்டை (-0.049) சிறப்பாக வைத்துள்ளதால் பஞ்சாப் அணிபிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெறக் கூடும். ஏனெனில் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றைநிறைவு செய்யக்கூடிய வாய்ப்புள்ள அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளைவிட பஞ்சாப் அணியின் நெட் ரன்ரேட் சிறப்பாக உள்ளது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் அணி -0.505 என்ற குறைந்த ரன்ரேட்டை கொண்டுள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் கடைசி 2 ஆட்டங்களில் கட்டாயமாக வெற்றி பெறுவதுடன் ரன் ரேட்டையும் கணிசமாக உயர்த்துவது அவசியம். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்பைவீழ்த்த வேண்டும். அதேவேளையில் ஹைதராபாத் அணி தனது கடைசி 2 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி காண வேண்டும்.

பெங்களூரு: 14 புள்ளிகளுடன் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடலாம். ஒருவேளை பெங்களூருஅணி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெறத் தவறினால் 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெற மற்ற அணிகளுடன் வரிசைகட்டி நிற்கும். பெங்களூரு அணி கடைசி 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தால் அது அந்த அணியின் நெட் ரன்ரேட்டை பாதிக்கும். இது மற்ற சில அணிகள் 14 புள்ளிகளை பெறும் போது நெட் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

டெல்லி: 14 புள்ளிகளுடன் உள்ள டெல்லி அணியின் நிலையும் ஏறக்குறைய பெங்களூரு அணியை போன்றதுதான். எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் ஒன்றில்வெற்றி பெற்றால் கூட எளிதில்பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிடலாம். எனினும் டெல்லி அணி தனதுகடைசி 2 ஆட்டங்களிலும் புள்ளிகள் பட்டியலில் டாப்பில் உள்ள மும்பை, பெங்களூரு அணிகளை சந்திக்க உள்ளது. அதிலும் டெல்லி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த நிலையில் மும்பையுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

டெல்லி அணி தனது கடைசி 2 ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தால் 14 புள்ளிகளுடன் தேக்கம் அடைந்துவிடும். இந்த நிலைஏற்பட்டு பஞ்சாப் அணி 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்தால் நெட் ரன்ரேட் கணக்கில் டெல்லியை பின்னுக்குத் தள்ளுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. டெல்லி அணிக்கு இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்பட்டால், 14 புள்ளிகளை பெறும் மற்ற அணிகளின் நெட் ரன்ரேட்டுடன் மல்லுக்கட்ட வேண்டியது வரும்.

ஹைதராபாத்: ஹைதராபாத் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கணக்கிடுவது எளிது. 10 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி கடைசி இரு ஆட்டங்களிலும் முதலில் வெற்றி காண வேண்டும். அதேவேளையில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளில் ஏதேனும் ஒன்று 16 புள்ளிகளை எட்ட வேண்டும். இந்த சூழ்நிலை ஏற்பட்டால் 14 புள்ளிகளை பெறும் மற்ற அணிகளை விட நெட் ரன்ரேட்டை சிறப்பாகவைத்துள்ளதால் பிளே ஆஃப்சுற்றுக்கான வாய்ப்பை ஹைதராபாத் அணி எட்டிப் பிடித்துவிடும்.

இன்றைய ஆட்டம்

டெல்லி - மும்பை

இடம்: துபாய்

நேரம்: பிற்பகல் 3.30

பெங்களூரு - ஹைதராபாத்

இடம்: ஷார்ஜா

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x