Published : 30 Oct 2020 03:12 AM
Last Updated : 30 Oct 2020 03:12 AM

18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; 90 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை; ஓசூரில் விரைவில் போன் உதிரி பாகம் தயாரிக்கும் ஆலை: ‘டாடா எலெக்ட்ரானிக்ஸ்’ என்ற பெயரில் டாடா குழுமம் ரூ.5,000 கோடி முதலீட்டில் திட்டம்

கோப்புப் படம்

சென்னை

வினய் காமத்/டி.இ.ராஜசிம்மன்

டாடா குழுமம் போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை ஓசூரில் உள்ள தொழிற்பேட்டையில் அமைக்க உள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூர் நகரில் அமைய உள்ள இந்த ஆலைக்கு டாடா எலெக்ட்ரானிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆலைக்காக 500 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கார்ப்பரேஷன் (டிட்கோ) ஒதுக்கியுள்ளது.

இந்த ஆலைக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடக்கத்தில் இந்த ஆலைக்கான முதலீடு ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்தாலும், பொருட்கள் கிடைப்பது மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டுத் தொகை ரூ.8 ஆயிரம் கோடி வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலை அமைவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசோ அல்லது டாடா குழுமமோ முழுவதுமாக வெளியிடவில்லை. எனினும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் திரட்டப்பட்ட தகவலின்படி இங்கு ஆப்பிள் நிறுவனத்துக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் என்று தெரிகிறது. சீனாவில் இருந்து வெளியேறும் ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை இந்நிறுவனம் தயாரித்து அளிக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே ஆப்பிள் ஐ-போன் 11-க்கு தேவையான உதிரி பாகங்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இந்த ஆலை சென்னையை அடுத்த பெரும்புதூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டைட்டன் கோ லிமிடெட் நிறுவனத்தின் பிரிசிசன் இன்ஜினீயரிங் பிரிவு, டைட்டன் இன்ஜினீயரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட் (டிஇஏஎல்) ஆகிய நிறுவனங்கள் புதிய ஆலைக்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றன. இந்த ஆலையில் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் 18 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் பெண்களுக்கு 90 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான உதவித் தொகையுடன் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பிளஸ் 2 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்து பிறகு டாடா ஆலையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சியின் போது தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் 0416-2244017 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது banuprasads@nttf.co என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொண்டு மேல் விவரங்களைப் பெறலாம். விண்ணப்பங்கள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

இந்த ஆலையை அமைப்பதன் மூலம் டாடா குழுமம் உற்பத்தி அடிப்படையிலான ஊக்க சலுகையைப் பெறும். மின்னணு பொருள் உற்பத்தியில் இந்தியா சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதற்காக நரேந்திர மோடி அரசு அறிவித்த திட்டத்தின்படி, உள்நாட்டிலேயே மொபைல் போன் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசம் அடைந்துள்ளன.

கர்நாடகா போட்டி

இந்த ஆலையை தங்கள் மாநிலத்துக்கு கொண்டு வருவதில் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களிடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் தமிழ்நாடு ஆலையை கொண்டு வருவதில் வெற்றி பெற்றது. தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு வகுத்த தொழில் கொள்கைகள்தான் இதற்கு பெரிதும் காரணமாக இருந்துள்ளன. இதனாலேயே ஃபாக்ஸ்தான், பிளெக்ஸ், சாம்சங், டெல், நோக்கியோ, மோட்டோரோலா மற்றும் பிஒய்டி உள்ளிட்ட நிறுவனங்களும் தமிழகத்தில் தங்களது ஆலையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர பிற முன்னணி உற்பத்தி நிறுவனமான விஸ்ட்ரான் மற்றும் பெகட்ரான் ஆகிய நிறுவனங்களும் தமிழகத்தில் ஆலை அமைப்பதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இவை இரண்டுமே ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களாகும். சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் ஆலை அமைக்க இடம் தேடி வருகின்றன.

சமீபத்தில்தான் தமிழக அரசு மின்னணு மற்றும் ஹார்ட்வேர் உற்பத்தி கொள்கை 2020-ஐ வெளியிட்டது. இதன்படி 2025-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் எலெக்ட்ரானிக்ஸ் துறை உற்பத்தி 10,000 கோடி டாலரை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x