Published : 30 Oct 2020 03:12 AM
Last Updated : 30 Oct 2020 03:12 AM

பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் நீக்கம்: சவுதி அரேபியா அதிகாரப்பூர்வ வெளியீடு

ரியாத்

பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து காஷ்மீர், கில்ஜித்- பல்திஸ்தான் பகுதிகளை சவுதி அரேபியா நீக்கியுள்ளது.

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் வரும் 21, 22-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி சவுதி அரேபிய அரசு சார்பில் புதிய கரன்ஸி (20 ரியால்) வெளியிடப்பட்டுள்ளது. இந்த கரன்ஸின் ஒரு புறம் மன்னர் சல்மான், ஜி20 சவுதி மாநாட்டின் லோகோ இடம்பெற்றுள்ளன. மறுபுறம் உலக வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது. இதில், பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட ஒட்டுமொத்த காஷ்மீரும் தனிப் பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் விடுதலைக்காக போராடி வரும் அம்ஜத் அயூப் மிர்ஸா கூறும்போது, "சவுதி அரேபியாவின் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவுக்கு சவுதி அரேபியா வழங்கிய தீபாவளி பரிசாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, "ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். காஷ்மீரை தனிப்பகுதியாக குறிப்பிட்டு இருப்பது குறித்து சவுதி அரேபியாவிடம் எங்களது ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளோம். சவுதி அரேபியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தன.

ஜி20 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த சவுதி அரேபியா அண்மைகாலமாக அந்த நாட்டிடம் இருந்து விலகி வருகிறது. சவுதி அரேபியா வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய - சவுதி நட்புறவு

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா நட்புறவை வலுப்படுத்தி வருகிறது.

ஈரான் மீது ஐ.நா. சபை விதித்த பொருளாதார தடைகள் காரணமாக அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது. தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 60 சதவீதத்தை சவுதி அரேபியா பூர்த்தி செய்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது துருக்கி, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆட்சேபம் தெரிவித்தன. சவுதி அரேபியா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மமூத் குரேஷி பகிரங்கமாக விமர்சித்தார். அப்போதே சவுதி அரேபியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் வெட்டவெளிச்சமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x