Published : 30 Oct 2020 03:12 AM
Last Updated : 30 Oct 2020 03:12 AM

இந்தியா போர் தொடுக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி கூறியதும் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு கால்கள் நடுங்கின விங் கமாண்டர் அபிநந்தன் விவகாரத்தை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 இந்திய வீரர்கள் பலியாயினர். இதற்கு பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை துல்லியத் தாக்குதல் நடத்தியது.

மறுநாள் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சுட்டுவீழ்த்தப்பட்டது. அதை ஓட்டிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்தது. அதன்பின், இந்தியாவின் நெருக்குதல் மற்றும் உலக நாடுகளின் நெருக்குதலால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

அபிநந்தன் பிடிபட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான சர்தார் அயாஸ் சாதிக் பாகிஸ்தானின் ‘துனியா நியூஸ்’ தொலைக்காட்சியில் கடந்த புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்ட பிறகு, பாகிஸ்தான் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் இம்ரான் கான் மறுத்துவிட்டார். அந்தக் கூட்டத்தில், ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மமூத் குரேஷி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது குரேஷி பேசும்போது, ‘‘அபிநந்தனை விடுவிக்காவிட்டால், அன்றைய இரவு 9 மணிக்கு பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும்’’ என்று தெரிவித்தார்.

அதை கேட்டவுடன் ராணுவ தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்த்து கொட்டியது. நாங்கள் எல்லோரும் அபிநந்தனை விடுவிக்க ஆதரவளித்தோம். ‘அபிநந்தன் விடுவிப்பு உட்பட அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன. அதன்பிறகு தொடர்ந்து ஆதரவு அளிக்க முடியவில்லை.

நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசக் கூடாது என்று முயற்சிக்கிறேன். ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் எங்களை திருடர்கள் என்றும், பிரதமர் மோடியின் நண்பர்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.இவ்வாறு அயாஸ் கூறினார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் இருந்த போது, நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தவர் சர்தார் அயாஸ் சாதிக் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x