Published : 30 Oct 2020 03:12 AM
Last Updated : 30 Oct 2020 03:12 AM

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து பின்னடைவு: உறுப்பு கல்லூரிகள் மீது கவனம் செலுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?

சென்னை

மனோஜ் முத்தரசு

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் நடப்பு ஆண்டும் மாணவர் சேர்க்கை மிக குறைவாகவே நடைபெற்றது தெரியவந்துள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் 1 லட்சத்து63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற கலந்தாய்வில் சிறப்பு, தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு என மொத்தமாக 71,195 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 91,959இடங்கள் காலியாக உள்ளன.

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, ஏசிடிமற்றும் குரோம்பேட்டை எம்ஐடி-யில் மொத்தமாக உள்ள 2,510 இடங்களும் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. அதேநேரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள 1,020 இடங்களில் 382 இடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல், அண்ணா பல்கலை.யின் உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. அண்ணா பல்கலைக்கு 16 உறுப்பு கல்லூரிகள் உள்ளன. அதில் நடப்பு ஆண்டு 6,420 இடங்கள் கலந்தாய்வுக்கு விடப்பட்டன. அதில், அண்ணா பல்கலை மண்டலகல்லூரிகளான கோவை கல்லூரியில் மட்டும் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. மதுரை கல்லூரியில் 96 சதவீதமும், திருநெல்வேலி கல்லூரியில் 92 சதவீதமும் நிரம்பின.

உறுப்பு கல்லூரிகளான பொன்னேரியில் 92 சதவீதமும், திருச்சியில் 88 சதவீதமும், விழுப்புரம் காகுப்பம் கல்லூரியில் 71 சதவீதமும் நிரம்பியுள்ளது. திண்டிவனம் மற்றும் நாகர்கோவில் கல்லூரிகளில் 58 சதவீதம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 8 உறுப்பு கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கையே நடைபெற்றுள்ளது. உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளிலும் 3 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. மாணவர் சேர்க்கை தொடர்ச்சியாக குறைந்து வருவது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் ஆர்.அஸ்வின் கூறும்போது, “அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதேபோல், உள்கட்டமைப்பு வசதி மோசமாக உள்ளது. மேலும், மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லை. இதனால்,உறுப்பு கல்லூரியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். எனவே, உறுப்பு கல்லூரிகள் மீது அண்ணா பல்கலை. தனி கவனம் செலுத்தவேண்டும்” என்றார்.

இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “உறுப்பு கல்லூரியில் 500-க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அவ்விடங்களில் பாதிக்கும்மேல் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். உறுப்பு கல்லூரிகளில் முறையாக பாடம் நடத்தப்படுவதில்லை என்று மாணவர்கள் மூலம் வெளியே தெரிய வருகிறது. இதனால்தான், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்கவேண்டும்” என்றனர்.

மாணவர் சேர்க்கை குறைவு குறித்து ஆய்வு:

அண்ணா பல்கலை. துணைவேந்தர் யோசனை

இதற்கிடையே, பொறியியல் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா யோசனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் அவர் கூறும்போது, “ஒட்டுமொத்தமாகவே பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. மாணவர் சேர்க்கை அளவுகோல் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. அதற்காக தமிழக அரசு, பேராசிரியர்கள், கல்வியாளர்களை இணைத்து விரிவாக ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அவ்வாறு விரிவான ஆலோசனை செய்த பின்னரே மாணவர் சேர்க்கை குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x