Published : 30 Oct 2020 03:13 am

Updated : 30 Oct 2020 09:58 am

 

Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 09:58 AM

அக்டோபர் 27 சிவகுமார் 80-வது பிறந்த நாள்: சிவகுமார் எனும் ஜீவநதி!

sivakumar-s-80th-birthday
திருமண நாளில் சிவகுமார் - லட்சுமி தம்பதி அன்று

திரையுலகை சமுத்திரத்துடன் ஒப்பிடுவது சாலப் பொருந்தும். அங்கே பிரம்மாண்டத் திமிங்கலங்கள், சுறாக்கள் மட்டுமல்ல; மனங்கவரும் டால்பின்களும் உண்டு. திறமை, தன்னம்பிக்கை, உழைப்பு ஆகியவற்றுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்து முக்குளித்தால் முத்துக்களை அள்ளலாம். அந்த முயற்சியில் மூச்சுப்பிடிக்க முடியாமல், முத்து வேண்டாம் கையில் கிடைத்த சிப்பியே போதும் எனக் கரையேறிக் காணாமல் போனவர்களே அதிகம். அலை உறங்கும் கடல்போலத் தோன்றினாலும் சுழல் நிறைந்த திரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற மாபெரும் ஜாம்பவான்களின் ராஜாங்கம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துணைக் கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்றவர்தான் சிவகுமார்.

ஓர் எளிய தமிழ் கிராமத்திலிருந்து சென்னை மகா பட்டணத்துக்கு தன்னந்தனியனாக வந்து, ஓவியக் கல்லூரியில் சேர்ந்து, தன் பதின்மத்தின் வேகத்தை எல்லாம் கலைப் படிப்பில் குவித்தவர். படித்து முடித்தபின், தேர்ந்துகொண்ட துறையின் மீதிருந்த தணியாத காதலால் ஊர்ஊராகச் சுற்றியவர். மண்ணையும் மக்களையும் சந்தித்து, 18 வயதில் ஒரு ‘ஜென்’ துறவிக்கே உரியக் கலைக் கூர்மையுடன் ‘ஸ்பாட் பெயிண்டிங்’ ஓவியங்களை வரைந்து குவித்தவர். அதன்பின்னரே திரைக்கடலில் ஒரு சின்ன டால்பினாக நீந்தத் தொடங்கிய சிவகுமாரால், எட்டு ஆண்டுப் போராட்டத்துக்குப் பின்னரே கதாநாயகன் என்ற அந்தஸ்தை எட்ட முடிந்தது. மொத்தம் 192 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் 175 படங்களில் கதாநாயகனாக நம் கண்களை நிறைத்திருக்கிறார்.


எழுத்தால் ஈர்த்தார்

இயக்குநர், ‘அருள்செல்வர்’ ஏ.பி.நாகராஜனை ஏறத்தாழ ஒரு ஞானகுருவாகவே வைத்து வளர்ந்தவர். திரையில் அவர் பதித்த சாதனைத் தடம், தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி, புத்தாயிரம் வரைத் தொடரும் நீண்ட நெடிய ராஜபாட்டை. கற்றதையும் பெற்றதையும் உலகுக்குக் கற்றுக்கொடுப்பவன்தான் உண்மையான கலைஞன். அந்த உயரிய பண்பு சிவகுமாரின் தனிச்சிறப்பு.

தான் சென்னைக்குப் புறப்பட்டு வந்த பின்னணியை, தூரிகையுடன் திரிந்த நாள்களை, தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்களை, திரைகடலில் முக்குளித்துப் பெற்ற முத்துக்களை, தன்னைச் சுமந்து சென்ற கப்பல்களின் மாலுமிகளை, அவர்களிடம் கற்ற பாடங்களை, சக பயணிகளிடம் வியந்த ஆற்றல்களை, நெஞ்சத்தில் ஊறும் அன்பை, சக மனிதனுக்கு எப்படி அள்ளிக்கொடுக்க வேண்டும் என்று வள்ளலார் காட்டிய வாழ்க்கையின் ஆதாரத் தத்துவத்தை, உழைப்பும் ஒழுக்கமும் அள்ளித்தரும் வெற்றி ரகசியங்களைப் பற்றி, 1986-ல் ஜூனியர் விகடன் இதழில் ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற தொடராக அவர் எழுதியபோது, அதை வாசித்து வியந்த லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.

பொதுவாகத் திரை நட்சத்திரங்களின் தொடர் என்றால், அவர்களிடம் பேட்டியாக எடுத்து, அதை ஈர்க்கும் நடையில் எழுதுவது இதழியல் உலகின் பழக்கம். அவர் எழுதிய அந்த எழுத்து, கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாகவே ஆனதுதான் காலத்தின் அதிசயம்! கல்லூரியில் இலக்கியம் படிக்க வேண்டிய காலத்தில் ஓவியம் பயின்றதால், இளமையில் எழுத்தாளர்களைப் பயிலமுடியாத சிவகுமார், 80-களில் வாசிப்பின் பக்கம் திரும்பியதை அறிந்தவன்.

ராஜாஜி, கல்கி தொடங்கி, கண்ணதாசன், ஜெயகாந்தன் எனத் தொடர்ந்து இன்றைய ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை வாசிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். 44 ஆண்டுகளாக சுனங்காமல் டைரிக் குறிப்புகள் எழுதி வந்ததாலும், தான் வகுத்துக்கொண்ட வாழ்க்கை முறையாலும்தான் சிவகுமாரால் ஈர்க்கும் எழுத்தாளராகவும் இயங்கமுடிகிறது. கலைஞன் என்பவன் கற்றுக்கொடுப்பவன் என்பதையும் தாண்டி, நிழல் தரும் ஆலமரமாக வேர் பிடித்து நிற்பதில்தான் சிவகுமாரின் சிறப்பே அடங்கியிருக்கிறது. நேரடியாக நன்கு அறிந்தவர்கள் சிவகுமாரைக் குறித்து எழுதத் தொடங்கினால், அதற்கு முடிவே இருக்காது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

1980-ம் வருடம். ‘வண்டிச்சக்கரம்’ படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்திருந்த நேரம். படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என்று படக்குழுவில் முக்கியமான கலைஞர்கள் எல்லாம் வேகவேகமாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தனர். பொதுவாகப் படப்பிடிப்புத் தளங்களில் இரண்டாம், மூன்றாம் நிலையில் பணியாற்றும் உதவியாளர்களை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு வாகனம் இருக்கிறதா, அவர்கள் எப்படிச் சொந்த ஊர்களுக்குச் செல்லப் போகிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். குறிப்பாக ‘வளர்ந்துவிட்ட கதாநாயகர்கள் எங்களையெல்லாம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்’ என்று தன் நினைவுகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார் பேரன் பேத்தி கண்டுவிட்ட ஒரு பழம்பெரும் உதவி இயக்குநர்.

“ ‘வண்டிச்சக்கரம்’ படப்பிடிப்பு முடிந்தது. அந்தப் படத்தின் கதாநாயகன் சிவகுமார் சார் புறப்படுவதற்கு முன்பு எங்களை எல்லாம் கைகாட்டி அழைத்தார். ‘எப்படி ஊருக்குப் போகப் போறீங்க?’ என்று அக்கறையுடன் கேட்டார். கேட்டது மட்டுமல்ல; பட்டென்று பையில் கையைவிட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்து அத்தனை பேருக்கும் 100 ரூபாய் வீதம் எல்லாரது கையிலும் கொடுத்தார். நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனோம். ‘பத்திரமாக ஊருக்குப் போய்ச் சேருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இந்த இயல்பு, திரைப்படத் துறையில் நாங்கள் கேள்விப்பட்ட வரை அன்றைக்கு எம்.ஜி.ஆர். போன்று ஒரு சிலரிடம் மட்டுமே இருந்துள்ளது. அப்படித் தந்த 100 ரூபாயாக இருந்த தொகை என்பது, அவர் சில ஆயிரங்கள் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த நேரம். ஒரு படத்துக்கு 25,000 ரூபாய் 30,000 ரூபாய் என்று வாங்கத் தொடங்கிய காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் 5,000 ரூபாயை அப்படியே மற்ற எல்லா கலைஞர்களுக்கும் கொடுத்துவிடுகிற அவரது இயல்பை, பணியாற்றிய படங்களில் எல்லாம் நாங்கள் நேரடியாகப் பார்த்தோம். தனக்கு வருவதிலிருந்து தேவையால் தவிப்பவருக்குப் பகிர்ந்து கொடுக்கிற குணம் இன்றுவரை அவரது ரத்தத்தில் சுண்டவில்லை” என்றார்.

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்டபின், ஒருமுறை சிவகுமார் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவரது துணைவியார் லட்சுமி அம்மாளிடம் கேட்டேன். ‘தொடக்கக் காலத்தில் பணம் குறைவாக வந்ததற்கும் பிறகு பெரிய அளவில் பணம் வரத் தொடங்கியதற்கும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன வித்தியாசம் பார்க்கிறீர்கள்?’ என்பதுதான் என் கேள்வி. எப்போதும் மலர்ச்சியாக இருக்கும் அவரது முகம், இப்போது இரு மடங்காக மலர்ந்தது. "அது ஒன்னும் இல்லீங்க... குறைவா வந்தப்பக் குறைவா நன்கொடை கொடுத்தார். நிறைய பணம் வர ஆரம்பிச்சதும் நிறைய நன்கொடை கொடுக்கக் தொடங்கிட்டார். அவ்வளவுதான் வித்தியாசம். அதுதானே நியாயமும்" என்றார். தாமரையின் உயரம் தண்ணீரின் உயரத்தைப் போன்றது என்பார்

வள்ளுவர். வருவாய்க்கு ஏற்றபடி தர்மமும் உயர்கிறது என்பது ஒரு சினிமா நடிகரிடம் இருக்கக்கூடிய குணம்தானா என்ற ஆச்சர்யமும் என்னைக் கவ்விக்கொண்டது. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.’ என்ற வள்ளுவனின் வாக்கை ஏற்றுகொண்ட வாழ்க்கைத் துணையல்லவா சிவகுமாருக்கு வரமாக வாய்த்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

சாதனைகள் தொடரும்

80 வயதைத் தொட்டவர்களை சாய்வு நாற்காலியில் சாய வைத்துவிடுகிற இந்தச் சமுதாயத்தில், சிவகுமார் இன்னும் மார்க்கண்டேயர். அது மட்டுமே அல்ல; எழுத்திலும் மேடையிலும் தனது முயற்சிகளை தொடர்ந்துகொண்டிருக்கும் வற்றாத ஊற்று.

“இப்போ எனக்கு முன்னாலே இருக்கிற ஒரே லட்சியம், 1330 குறள்களைக் கொண்ட திருக்குறளில் 100 குறள்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை என்கிற அளவில் எழுதி முடித்திருக்கிறேன். அதையே ஓர் உரையாகவும் அமைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம், 10 ஆயிரம் மக்கள் ஆர்வமுடன் கூடியிருக்கும் சபையின் முன்னால் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று நான் தவமிருக்கிறேன்” என்கிறார்.

உலகமே வியக்கும் திருக்குறளை அவர் கையிலெடுத்திருப்பதால், வள்ளுவர் வழியில் நின்று அவருக்கு எழுதிய வாழ்த்துப் பாடலை உங்கள் வாசிப்புக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். சூலூருக்குப் பக்கத்தில் இருக்கும் காசிக்கவுண்டன்புதூர் என்னும் சிற்றூரிலிருந்து புறப்பட்ட இந்த சிறு வாய்க்கால், மெல்ல மெல்ல நடந்து ஆறாகி, பேராறாகி ஒரு ஜீவநதியாக பொங்கிப் பிரவகித்து ஓடிக்கொண்டே இருக்கிறது. வற்றாத வெள்ளப்பெருக்கு வருகிற நதிகளின் பயணம் முடிவதேயில்லை!

தமிழ்போல வாழ்ந்திடுக!

சிவக்குமார் என்றிவரைச் சொல்லுவது பொருத்தமில்லை; தவக்குமார் என்றுநான் தமிழ்கொண்டு வாழ்த்துகிறேன்!

எண்பதே வயதான இளைஞனிவன்! முதுமையைத் தின்றுவிட்டு நிமிர்ந்துநிற்கும் தேக்குமரக் கிழவனிவன்!

முன்னோர்செய் தவங்களினால் முகிழ்த்துவந்த பொற்பூவே; பின்னருள்ள பேரறத்தைப் பேணவந்த அற்புதமே!

பாரதத்தின் தருமனைப் பார்த்ததில்லை என்பதனால் நேரெதிரே உனைநிறுத்தி நிஜமென்று காட்டுகிறோம்!

உலைபொங்கச் சோறளித்து உடல்காக்கக் துணிகொடுத்து விலையில்லாக் கல்வியினை வெள்ளமெனப் பாயவிட்டு

சூல்கொண்ட குழந்தைக்குச் சுகமளிக்கும் கர்ப்பிணிபோல் பால்நினைந்த மாத்திரத்தில் பரிந்தூட்டும் தாயைப்போல்

ஊர்நடுவே பழுத்த மரம்! ஊருணியாய் வாழும் நிலம்! யாரருகில் வந்தாலும் அரவணைக்கும் அன்னை மனம்!

கம்பனிலும் கரைகண்டாய்; கர்ணனிலும் நிலை கொண்டாய்! நம்புவதற் கியலாத நினைவாற்றல் நீ கொண்டாய்!

ஆலமரம் போல்நாளும் அகண்டு நிழல்கொடுத்துக் காலமெலாம் வாழ்ந்திடுக! கருணைமழை பொழிந்திடுக!

கம்பனாய் வள்ளுவனாய்க் காலமெலாம் நிலைத்திருக்கத் தம்பிநான் வாழ்த்துகிறேன்! தமிழ்போல வாழ்ந்திடுக!!

- கவிஞர், திரு.வீரபாண்டியன்

கட்டுரையாளர்,

தொடர்புக்கு: thiru.veerapandian@gmail.com


சிவகுமார்80-வது பிறந்த நாள்ஜீவநதிஎழுத்தால் ஈர்த்தார்சாதனைகள் தொடரும்திரையுலகை சமுத்திரம்ஜென்துறவிதமிழ் சினிமாதிரை நட்சத்திரங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x