Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

அண்ணா பல்கலை.யை பிரிக்க எதிர்ப்பு: 70-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கூட்டாக அறிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க விடமாட்டோம் என 70-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடார்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர்வே. வசந்தி மற்றும் முன்னாள்நீதிபதிகள் உள்ளிட்ட 79 பேர் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களுக்கும் நிதி ஆதாரத்தை கூடுதலாக வழங்கி அவற்றை மேம்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு மாறாக 10 அரசு கல்வி நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு மட்டும் ரூ.1,000 கோடி ஒதுக்குவது, கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திவிடும். மேலும், சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் 100 மாணவர்களில் 30 பேரும், ஆசிரியர் பணியில் 25 சதவீதம் வரை வெளிநாட்டவராக இருக்கலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்துபெற்றால், அதில் தமிழக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதாகவே அர்த்தமாகும்.

குறிப்பாக சிறப்பு அந்தஸ்து பெறும் கல்வி நிறுவனங்கள் யுஜிசி, ஏஐசிடிஐ ஒப்புதல் பெறாமல் கல்விக் கட்டணத்திலும், மாணவர் சேர்க்கையிலும் சுயமாக முடிவு செய்ய வழிவகை உள்ளது. இதனால், கல்விக் கட்டணம் பல மடங்குஅதிகரிக்கும். தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும்.இதைக் கருத்தில் கொண்டுதான் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசின் ஒப்புதல் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆதரவு கொடுக்கிறார்.

மேலும், தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க உள்ளதன் நோக்கம் தவறாக உள்ளது. இது சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை ஏற்படுத்தி கொடுக்க நேரிடும்.

இதையெல்லாம் பார்க்கும்போது, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் விவகாரம் மற்றும் பிரிக்கப்படுவதில் மிகப் பெரிய சதி இருப்பது தெளிவாகிறது. எனவே, தமிழக மக்கள் சார்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க, நாங்கள் விட மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x