கறுப்பு - வெள்ளை முதல் நேரலை வரை | உலகத் தொலைக்காட்சி நாள் ஸ்பெஷல்

கறுப்பு - வெள்ளை முதல் நேரலை வரை | உலகத் தொலைக்காட்சி நாள் ஸ்பெஷல்
Updated on
2 min read

ஏன் கொண்டாடப்படுகிறது? - 1996, நவம்பர் 21, 22 தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபை முதல் உலகத் தொலைக்காட்சி இயக்கத்துக்கான கூட்டத்தை நடத்தியது. வேகமாக மாறிவரும் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் முன்னணி ஊடகப் பிரமுகர்கள் ஒன்று கூடினர்.

உலகில் நடைபெறும் மோதல்கள் மீது கவனம் செலுத்தவும் அமைதி, பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக, பொருளா தாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும் ஐ.நா. தலைவர்கள் தொலைக்காட்சி நாளை அங்கீகரித்தனர்.

நவீனத் தொலைக்காட்சிப் பெட்டிகள் 1920களிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டபோதும் பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு மாறுவதற்குப் பல ஆண்டுகள் ஆயின.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கறுப்பு - வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகள் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் புழக்கத்துக்கு வந்தன. 1950களில் அங்கே பெரும்பாலானோர் வீடுகளில் தொலைக்காட்சி இருந்தது. 1960களின் மத்தியில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அமெரிக்காவிலும் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் விற்பனைக்கு வந்தன.

கொரியப் போரின்போது ‘அமெரிக்க நடமாடும் ராணுவ மருத்துவமனை’யில் பணியாற்றிய மூன்று மருத்துவர்களை மையமாக வைத்து ரிச்சர்டு ஹூக்கர் எழுதிய ‘MASH’ நாவல், 1970இல் திரைப்படமாக வெளியானது. இதைத் தழுவி எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்தான் (M*A*S*H) இதுவரை உலக அளவில் அதிகமாகப் பார்க்கப்பட்ட தொடர்.

251 அத்தியாயங்கள் கொண்ட இதன் முதல் அத்தியாயம் 1972, செப்டம்பர் 17 அன்று ஒளிபரப்பானது. 1983, பிப்ரவரி 28 அன்று ஒளிபரப்பான இதன் கடைசி அத்தியாயத்தைப் பார்க்க மட்டும் 10.3 கோடி மக்கள் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தனர். ‘M*A*S*H’ தொடரைத் தொடர்ந்து ‘Cheers’ (8.44 கோடி), ‘Seinfeld’ (7.63 கோடி) ‘Friends’ (6.59 கோடி) ஆகிய தொடர்கள் அதிகமானோரால் விரும்பிப் பார்க்கப்பட்டன.

பிரிட்டனில் உள்ள மக்களுக்கு மற்றவர்களைவிடத் தொலைக்காட்சி மேல் அதிக விருப்பம். 2004இல் அங்கே ஒவ்வொரு வீட்டிலும் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை அந்த வீட்டில் வசித்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

முதலில் கறுப்பு - வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகள்தான் புழக்கத்தில் இருந்தன. திரைப்படங்களும் கறுப்பு - வெள்ளையில்தான் காட்சிப் படுத்தப்பட்டன. அதனால், அந்தக் காலத்தில் மக்களுக்குக் கனவுகளும் கறுப்பு - வெள்ளையாகத்தான் தோன்றுமாம்.

1950இல் ‘Zenith’ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ரிமோட் கன்ட்ரோல், தொலைக்காட்சியோடு கம்பி மூலம் இணைக்கப்பட்டிருந்தது. 1955களில் கம்பியில்லா ரிமோட் அறிமுகமானது.

முதல் வர்த்தக விளம்பரம் அமெரிக்கத் தொலைக்காட்சியில் பேஸ்பால் விளையாட்டுப் போட்டி ஒளிபரப்பின்போது 1941இல் வெளியானது. Bulova கைக்கடிகாரங்களைப் பற்றிய விளம்பரம்தான் தொலைக்காட்சியில் வெளியான முதல் வர்த்தக விளம்பரம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்யும் ஒளிநாடாக்கள் (VCR), சோனி நிறுவனத்தால் 1970இல் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு மக்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் படங்களையும் அதில் பதிவுசெய்து தங்களுக்கு விருப்பமான நேரத்தில் பார்க்கத் தொடங்கினர்.

கேபிள் டிவி, 1948இல் அமெரிக்காவுக்கு அறிமுகமாகி 1984இல் மும்பைக்கு வந்தது. வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்த பிறகு 1990களில் இங்கும் கேபிள் டிவி பரவலானது.

Television என்கிற ஆங்கிலச் சொல்லைச் சுருக்கி 'TV’ என அழைக்கும் நடைமுறை 1948இல் வந்தது.

| நவ.21 - உலக தொலைக்காட்சி நாள் |

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in