

சென்னை: நாளை (மார்ச் 1) முதல் வாட்ஸ்அப் பயன்பாட்டில் ‘சிம் பைண்டிங்’ என்ற முக்கிய மாற்றத்தை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அரசின் உத்தரவுக்கு இணங்க இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்துவதும் இதில் அடங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
மாற்றம் ஏன்? - தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பு விதியின் (2024) கீழ் தொலைத்தொடர்புத் துறை, இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் சிம் பைண்டிங் செய்ய வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது. இது தேசிய பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் இருந்து கிடைத்துள்ள தகவல் உறுதி செய்கின்றன. அதனால் இந்த மாற்றத்தை நாளை முதல் மெட்டா அறிமுகம் செய்கிறது.
சிம் பைண்டிங் என்றால் என்ன? - சர்வதேச அளவில் ‘Verify Once’ என்ற முறையின் கீழ் பயனர்களை சரிபார்த்து வருகிறது வாட்ஸ்அப். அந்த வகையில் முதல் முறையாக ஒரு எண்ணில் வாட்ஸ்அப் கணக்கு தொடங்கும் போது மட்டும் அந்த எண்ணின் சிம் கார்டு, அந்த போனில் இருக்க வேண்டும். அதன் பின்னர் சிம் கார்டை அந்த போனில் இருந்து அகற்றினாலும் வாட்ஸ்அப் வழக்கம் போல செயல்படும்.
ஆனால், சிம் பைண்டிங் விதி அதை மாற்றி உள்ளது. தொலைத்தொடர்புத் துறை கட்டமைத்துள்ள விதிகளின் படி, சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தப்படும் பிரதான போனில் அந்த எண்ணுக்கான சிம் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை அந்த போனில் சிம் கார்டு உள்ளதா என்பதை வாட்ஸ்அப் கண்டறியும். ஒருவேளை அந்த போனில் சிம் கார்டு நீக்கப்பட்டு இருந்தாலோ, மாற்றி இருந்தாலோ, டி-ஆக்டிவேட் செய்திருந்தாலோ வாட்ஸ்அப் கணக்கு இயங்காது. மீண்டும் அசல் சிம் கார்டை போனில் சேர்த்து, மீண்டும் சரிபார்த்த பிறகுதான் வழக்கம் போல இயங்கும். இந்த மாற்றம் வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் செயலி, டேப்லெட் மற்றும் செகண்டரி போன்களில் பயனர்களின் வாட்ஸ்அப் பயன்பாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல்.
வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் செயலியில் வாட்ஸ்அப் கணக்கை நாள் முழுவதும் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த புதிய நடைமுறையால் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும் போது ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை தானாகவே லாக்-அவுட் ஆகும். அதன் பின்னர் மீண்டும் அதை அக்சஸ் செய்ய சிம் கார்டு உள்ள பிரைமரி போனில் இருந்து கணக்கை லிங்க் செய்ய வேண்டும். இதோடு லிங்க் செய்யப்பட்ட சாதனங்களிலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.