

கல்வி, தகவல், பொழுதுபோக்கு ஆகியவை தொலைக்காட்சியின் மூன்று பயன்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்தைச் சேர்ந்த கல்வியாளர் நீல் பிளெமிங், 1987இல் ‘பார்த்தல், கேட்டல், வாசித்தல் / எழுதுதல், செயல்வழி அறிதல்’ எனும் 'VARK’ (Visual, Auditory, Reading / Writing, Kinesthetic) கற்றல் மாதிரியை உரு வாக்கினார்.
ஆசிரியர் கரும்பலகையில் எழுதிக் காட்டி, வாசித்து விளக்கம் தருவதன் வழியே புரிந்துகொண்ட முந்தைய தலைமுறையினர் செய்முறைப் பயிற்சிகள் வழியாகவும் தங்களது பாடங்களைக் கற்றுத் தெளிந்தனர்.
ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பெரு மளவிலான மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க தொலைக்காட்சி உதவிக்கு வந்தது. 1932இல் அமெரிக்காவிலுள்ள அயோவாபல்கலைக்கழகத்தில் நடந்த உலகக் கண்காட்சியில் முதன்முறையாகத் தொலைக்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது.
இரண்டாம் உலகப் போரினால் அதன் உடனடிப் பயன்பாடு தாமதமானபோதும், 1948வாக்கில் கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் தொலைக் காட்சியைப் பயன்படுத்தும் சூழல் அங்கு உருவானது.
1959 செப்டம்பர் 15இல் இந்தியாவுக்குள் தொலைக்காட்சி கால் பதித்தது. 1975க்குப்பிறகு அதன் ஒளிபரப்பு பெருநகரங்கள் வழியே மக்களைச் சென்றடைந்தது. ஆனால், கல்விப் பயன்பாட்டைப் பொறுத்த வரை அதன் பங்களிப்பு முன் னரே தொடங்கிவிட்டது.
1961இல் டெல்லியிலுள்ள சில பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், இந்திப் பாடங்கள் தொலைக்காட்சி வழியே கற்பிக்கப் பட்டன. அப்படிக் கற்ற மாணவர்களின் திறன் மற்ற வர்களைவிட அதிகமிருந்ததாக, அமெரிக்கச் சமூகவியலாளர் பால் நாரத் குறிப் பிட்டிருக்கிறார்.
1984இல் செயல்படுத்தப்பட்ட உயர்கல்வி தொலைக்காட்சித் திட்டம் ’நாடு தழுவிய வகுப்பு’ என்கிற பெயரில் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றுபடுத்தியது. 1991இல் திறந்தவெளிப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகளை தூர்தர்ஷன் தொலைக் காட்சி தொடர்ந்து மேற்கொண்டது.
2002இல் ஞான்தர்ஷன் ஒளிபரப்பை மத்திய அரசு தொடங்கியது. 2019இல் கல்வித்தொலைக்காட்சி அலைவரிசையைத் தமிழக அரசு தொடங்கியது. இவை முழுக்கப் பாடத்திட்டங்கள் சார்ந்தும் மாணவர்கள் விழிப்புணர்வு தொடர்பாகவும் ஒளிபரப்பினை மேற்கொள்கின்றன.
கரோனா காலத்தில் கற்றலில் இருந்து மாணவர்களை விலகாமல் பார்த்துக்கொண்டதில் தொலைக்காட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு.
கல்வியைப் பொழுதுபோக்கு வாயிலாகச் சொல்லும் வகையில் அமைந்த விநாடிவினா, அலைபேசி வழிகாட்டுதல்கள், நாடகவழி விளக் கங்கள் உள்ளிட்டவையும் குறிப்பிடத்தக்கப் பலன்களைத் தருகின்றன. ஆகையால், பலதரப்பட்ட வயதினரும் கற்றலைப் பெறுவதில் தொலைக்காட்சிகள் உதவுகின்றன.
மொழியறிவு மேம்பாடு, பண்பாட்டு விழிப்பு உணர்வு, சமூக / உணர்வு சார்ந்த கற்றல், அறிவியல் ஆர்வம், அறிவாற்றல் திறன் ஆகியவற்றைத் தொலைக்காட்சி யின் வழியே எளிதாக கற்றுத்தர முடியும். சமூக வானொலி போன்று சமூகத் தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கல்வி நிலையங்களில் செயல் படுத்துவதன் வழியே புதிய திசைகள் நோக்கிப் பயணிக்க முடியும்.
- மாபா