

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டின் 2-ம் நாள் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பங்களை பொருளாதார ரீதியாக பயன்படுத்தாமல், மனித குலத்தின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விண்வெளி முதல் ஏஐ வரை அனைத்து தொழில்நுட்பங்களிலும் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் ஏஐ தொழில் நுட்பம் அனைத்து மாவட்டங்களையும் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனைத்து மொழிகளிலும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம்.
சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவால் பல்வேறு சவால்களும் எழுந்துள்ளன. இதை பயன்படுத்தி டீப்-பேக் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு குற்றச் செயல்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் ஜி20 நாடுகள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன். கரோனா பெருந்தொற்று காலத்தில் உலகத்தின் விநியோக சங்கிலி உடைந்தது. அந்த இக்கட்டான காலத்திலும் 150 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை இந்தியா அனுப்பி வைத்தது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, நியாயமான வணிகம், நேர்மையான நிதி ஆதாரம் ஆகிய உயரிய கொள்கைகளை இந்தியா பின்பற்றுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.