

புதுடெல்லி: கடந்த 1980-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவுவாகனமான எஸ்எல்வி-3, ரோகினி (RS-1) செயற்கைக்கோளை புவியின் கீழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. இதன் மூலம் இந்தியா விண்வெளித் துறையில் முக்கிய உலக நாடுகளின் பட்டியலில் இணைந்தது.
இந்நிலையில் சரியாக 46 ஆண்டுகள் கழித்து அதே ஜூலை 18-ம் தேதி இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் (ஸ்கைரூட்) முதன்முதலில் உருவாக்கப்பட்ட விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நாளும் எப்போதும் நினைவுகூரப்படும்.
எஸ்எல்வி-3 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் ஆவார். எனவே, ஸ்கைரூட் நிறுவனம் கலாமுக்கு விக்ரம்-1 மூலம் பல வழிகளில் அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட்டின் மூன்று திடநிலை அடுக்குகளுக்கு கலாம்-1200, கலாம்-250 மற்றும் கலாம்-100 என பெயர் சூட்டியுள்ளது. அது மட்டுமின்றி, கலாமின் நுண்-சிற்பம் ஒன்றை விக்ரம்-1 விண்வெளிக்கு சுமந்து சென்றுள்ளது.
இதுகுறித்து ஸ்கைரூட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தனா அளித்த பேட்டியில் கூறியதாவது: டாக்டர் அப்துல் கலாம் நம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகம். விக்ரம்-1 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகளுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாக ஒரு ஊசியின் காதில் செதுக்கப்பட்ட டாக்டர் கலாமின் நுண்-சிற்பம் ஒன்றையும் நாங்கள் விண்வெளிக்கு அனுப்பியுள்ளோம்.
எஸ்எல்வி-3-ன் முதல் வெற்றிகரமான பயணம் நிகழ்ந்த அதே ஜூலை 18-ம் தேதியில்தான் இந்த விக்ரம்-1 ஏவுதலும் நிகழ்ந்துள்ளது என்பது அற்புதமானது. பெரிய ராக்கெட்களை உருவாக்குவதுதான் எங்கள் நீண்டகால கனவு. இது இந்தியாவை ஒரு பெரிய விண்வெளி மையமாக மாற்றும். தற்போதைய வெற்றி எங்கள் எதிர்காலத் திட்டங்களுக்கு உந்துதலைத் தந்துள்ளது. நாங்கள் தொடர்ந்து வானத்தை இலக்காக கொண்டு, அதிவேக தொடர் ஏவுதல்களைச் சாத்தியமாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.