

X Platform
புதுடெல்லி: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரிமியம் மற்றும் பிரிமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு க்ரோக் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதி வழங்கப்படுகிறது.
இந்த க்ரோக் ஏஐ மூலம் நடிகர், நடிகைகள், பிரபலங்கள், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி வெளியிடப்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை பொறுப்பு அதிகாரிக்கு, மத்திய மின்னணு, தகவல் தொழில் நுட்பத்துறை கடந்த 2-ம் தேதி 4 பக்க நோட்டீஸை அனுப்பியது. அதில், “க்ரோக் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து ஆபாச படங்கள், வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும். இந்த ஏஐ செயலி தவறாக பயன்படுத்தப் படுவதை தடுக்க தொழில் நுட்ப ரீதியாக மாற்றங்களை செய்ய வேண்டும். நோட்டீஸ் கிடைக்க பெற்ற 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை: இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “க்ரோக் ஏஐ மூலம் ஆபாச படங்களை உருவாக்குபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில் ஆபாச படங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று ஜனவரி 7-ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை கால அவகாசம் வழங்கி உள்ளது.