

“எந்த நாடும் செய்ய முடியாததை, இந்தியா யுபிஐ உருவாக்கி சாதித்துள்ளது” என யுபிஐ பயன்பாடு குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று கலந்து கொண்டு பேசியதாவது:
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள தெருவோர வியாபாரியால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை. அவருக்கு எந்த முகவரியும் இருக்காது, எந்த ஆவணங்களும் இருக்காது. ஆனால் அந்த வியாபாரியால் பணத்தை தனது போனில் பெற முடிகிறது.
ஏழ்மையுடன் போராடிய கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வில், யுபிஐ என்ற டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தும் முறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொழில்நுட்ப கதை அல்ல. நாகரிகத்தின் கதை. எந்த நாடும் செய்ய முடியாததை இந்தியா உருவாக்கியுள்ளது.
140 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளத்தைக் கொடுத்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வெளிப்படையானது. ஒன்றிணைந்து செயல்படக் கூடியது. இறையாண்மை மிக்கது என்று அழைக்கின்றனர்.
மனிதர்களின் முன்னேற்றத்துக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதுதான் இந்தியாவின் உறுதிப்பாடு என்பதை இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள் பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
புதுமை மற்றும் பொறுப்புணர்வையும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தையும் யார் ஒருங்கிணைக்கிறார்களோ, அவர்களால்தான் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் கட்டமைக்கப்படும். இதன் எதிர்காலத்தை வடிவமைக்க இந்தியா மற்றும் பிரான்ஸ் உதவும். இவ்வாறு இமானுவேல் மேக்ரான் கூறினார்.