

சென்னை: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் டைரக்ட் மெசேஜ்களுக்கான எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம் வரும் மே 8-ம் தேதி முதல் முடிவுக்கு வர உள்ளது. இது பயனர்களின் பிரைவசி சார்ந்து பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் பில்லியன் கணக்கான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன்: கடந்த 2023-ல் இன்ஸ்டாகிராமில் எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம் டைரக்ட் மெசேஜில் அறிமுகமானது. மெட்டா தளங்களில் பயனர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் வகையில் இந்த அம்சம் அறிமுகமானது.
இந்தச் சூழலில் வரும் மே 8 முதல் இந்த அம்சத்தை இன்ஸ்டா நீக்க உள்ளது. இதை மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த அம்சம் பரவலான பயனர்கள் பயன்படுத்தாத காரணத்தால் நீக்குவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
இதனால் பயனர்களுக்கு பாதிப்பு என்ன?
இன்ஸ்டாகிராமில் டிஎம்-ல் எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன் நீக்கப்படுகின்ற காரணத்தால் பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் அனுப்பும் மெசேஜ்கள், தரவுகளை மெட்டா அக்சஸ் செய்யும். அதை விளம்பர நோக்கத்துக்காகவும், கன்டென்ட்களை கவனிக்கவும், சட்ட ரீதியான கோரிக்கை அடிப்படையில் அதை பல்வேறு முகமைகளுக்கு மெட்டா பகிரவும் முடியும்.
இன்ஸ்டா தளத்தில் டிஎம் மெசேஜ் செய்யும் பயனர்களை வெகுவாக பாதிக்கும். பயனர்கள் அனுப்பும் மற்றும் பெறுகின்ற மெசேஜ்களை அனுப்புநர் மற்றும் பெறுநரை தவிர வேறு யாரும் அக்சஸ் செய்ய முடியாது என்பதை எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம் உறுதி செய்கிறது. அதை இன்ஸ்டா நீக்குகிறது.
மைக்ரோபோன் மூலம் பயனர்களை மெட்டா தளம் உளவு பார்ப்பதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது உண்டு. இதில் இன்ஸ்டா தளமும் உள்ளது.
இது குறித்து பயனர்கள் தங்கள் ஐயங்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் இன்ஸ்டா தரப்பில் விளக்கம் அளிப்பது உண்டு. கடந்த ஆண்டு இந்த குற்றச்சாட்டு எழுந்த போது கூட இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொஸேரி விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில்தான் தற்போது எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம் இன்ஸ்டாவில் நீக்கப்படுகிறது.
மேலும், மெட்டாவின் இந்த நகர்வு காரணமாக இன்ஸ்டா பயனர்கள் மெசேஜ் சார்ந்த சேவைகளுக்கு வாட்ஸ்அப் தளத்துக்கு மாறலாம். இந்த தளத்தில் எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது.