

சென்னை: கடந்த 16-ம் தேதி ‘கிமி’ சாட்பாட்டின் ‘கே3’ வெர்ஷனை சீனாவின் மூன்ஷாட் ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதற்கு பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதோடு இதற்கான டிமாண்டும் அதிகரித்தது. இந்நிலையில், இதன் கட்டண சந்தாவை அந்நிறுவனம் நிறுத்தி உள்ளது.
‘ஏஐ’ உலகில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் கிமி கே3 வெர்ஷன் அமைந்தது.
இதன் செயல்பாடு அமெரிக்காவின் ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஏஐ மாடல்களுடன் பலரும் ஒப்பிட்டு வருகின்றனர். இதன் அறிமுகம் ஏஐ துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் கோடிங் திறன் பெஞ்ச்மார்க்கை செட் செய்வதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘கிமி கே 3’
செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட்பாட் தான் ‘கிமி’. இதை மூன்ஷாட் நிறுவனம் டெவலப் செய்தது. கடந்த 2023-ல் இதன் முதல் ஏஐ மாடல் வெர்ஷன் அறிமுகமானது. தொடர்ந்து அடுத்தடுத்த வெர்ஷன்களை மூன்ஷாட் அறிமுகம் செய்தது. இப்போது ‘கிமி கே3’ மாடல் அறிமுகமாகி உள்ளது.
கடந்த 16-ம் தேதி ‘கிமி கே3’ அறிமுகமானது. அதன் பின்னர் ஏஐ லீடர்போர்டில் Claude Fable மற்றும் சாட்ஜிபிடி-க்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தது. இதன் செயல்திறன் சிறப்பாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உலகின் முதல் ஓபன்-வெயிட் திறந்தநிலை ஏஐ மாடலாக அறியப்படுகிறது. இதற்கு பயனர்கள் மத்தியில் உலக அளவில் வரவேற்பு கிடைத்தது.
வழக்கமான ஏஐ சாட்பாட் போல் இல்லாமல் இதன் செயல்பாடு மாறுபட்டு இருக்கும் என மூன்ஷாட் தெரிவித்துள்ளது. மென்பொருள் உருவாக்கம், நிதி தரவுகளை ஆய்வு செய்வது, ஆய்வறிக்கையை பகுப்பாய்வு செய்வது, வீடியோ எடிட்டிங்கில் உதவுவது என பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியுமாம். மேலும், ஒரு ப்ராம்ப்டுக்கு பதில் அளிப்பது என்று இல்லாமல் பல்வேறு டாஸ்குகளை இது ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் என மூன்ஷாட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த மாடல் அறிமுகமான 48 மணி நேரத்தில் கட்டண சந்தாவை தற்காலிகமாக நிறுத்துவதாக மூன்ஷாட் நிறுவனம் அறிவித்தது. பயனர்கள் மத்தியில் நிலவும் டிமாண்ட் இதற்கு காரணம் என்று கூறியது. மேலும், ஏற்கெனவே சந்தா செலுத்திய பயனர்களை கருத்தில் கொண்டும், புதிதாக இணையவுள்ள பயனர்களின் நலன் சார்ந்தும் இந்த முடிவு என்று அந்நிறுவனம் அறிவித்தது. வரும் நாட்களில் சந்தா முறையை இரண்டு பிரிவுகளாக மூன்ஷாட் வழங்க திட்டமிட்டுள்ளது.