'அடுத்த 2 வாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்கும்; டிசம்பரில் 5ஜி’ - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கங்கோத்ரி: அடுத்த 2 வாரங்களில் சுமார் 200 சைட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தொடங்கும் என மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாத வாக்கில் 5ஜி சேவையும் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

“அதிகபட்சம் அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 200 சைட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும். மூன்று மாத கால சோதனை ஓட்டத்திற்கு பிறகு நாள் ஒன்றுக்கு 200 தளங்கள் என்ற அடிப்படையில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். நவம்பர் - டிசம்பர் மாதத்தில் 5ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும். இதற்கு மென்பொருள் ரீதியாக சிறிய அளவு மட்டும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும்” என உத்தராகண்ட் மாநிலத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதற்கான பணிகளை டிசிஎஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் நிறுவனம் இணைந்து மேற்கொண்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 1.23 லட்சம் சைட்களில் 4ஜி சேவை அறிமுகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல். ஒவ்வொரு நிமிடமும் ஒரு 5ஜி சைட் ஆக்டிவேட் செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இயங்கி வரும் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். இது அரசு நிறுவனமாகும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தரவுகளின் (கடந்த மார்ச் மாத தகவல்) படி நாட்டின் ஒட்டுமொத்த பயனர்களின் எண்ணிக்கையில் மொபைல் செக்மென்டில் சுமார் 103.68 மில்லியன் சந்தாதாரர்களுடன் வெறும் 9.27% சதவீதத்தை மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனம் தன்வசம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in