

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள போன்களில் பயன்படுத்தும் வகையில் ‘சாட் ஜிபிடி’ மொபைல்போன் செயலியை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகி உள்ளது.
படிப்படியாக உலகின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அதே போல வெகு விரைவில் ஆண்டராய்டு இயங்குதளத்திலும் இந்த செயலி அறிமுகமாகும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
மொபைல் போன் பயனர்கள் இந்த செயலியை தங்கள் போனில் இன்ஸ்டால் செய்து இலவசமாக பயன்படுத்தலாம். இப்போதைக்கு சந்தா கட்டணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இருந்தாலும் சாட் ஜிபிடி-4ல் கிடைக்கும் அம்சத்தை ஏற்கனவே சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 20 அமெரிக்க டாலர் சந்தா செலுத்த வேண்டும். இது சாட் ஜிபிடி பிளஸ் என அறியப்படுகிறது.
“பயனர்கள் சாட் ஜிபிடி-யை இலவசமாக பயன்படுத்தலாம். அதோடு பயனர்களின் பல்வேறு சாதனத்தின் ஹிஸ்ட்ரியை சிங்க் (Sync) செய்யும். வாய்ஸ் இன்புட் வசதியும் உள்ளது. பயனர்கள் இந்த செயலியை எப்படி பயன்படுத்த உள்ளார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளோம்.
பயனர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் சாட் ஜிபிடி-யின் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவோம். ஆண்ட்ராய்டு பயனர்களே அடுத்து நீங்கள் தான். விரைவில் உங்கள் சாதனத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளோம்” என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
சாட் ஜிபிடி? தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட் தான் சாட் ஜிபிடி. இதனை ஓபன் ஏஐ எனும் ஆய்வக நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.