கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றம்

கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றம்
Updated on
1 min read

சென்னை: ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சட்டவிரோதமாக போலி கடன் செயலிகளை உருவாக்கி, அவற்றின்வாயிலாக கடன் கொடுத்து, கொடுத்த பணத்தைவிட அதிகதொகை கேட்டு வாடிக்கையாளர்களை மிரட்டுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டன.

மேலும், வாடிக்கையாளர் குறித்த காலத்துக்குள் பணத்தை திரும்பச் செலுத்தாவிட்டால், அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவர்களது உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டல் விடுப்பதாகவும் குற்றாச்சாட்டுகள் எழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றன. இந்நிலையில், சட்டவிரோத கடன் செயலிகளை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் கடிதம் எழுதி இருந்தனர்.

இதையடுத்து, கடந்த 4 மாதங்களில் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்த 221 கடன் செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும், 61 கடன் செயலிகளை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் கோரிக்கை வைத்துள்ளனர்.

386 அவதூறு வீடியோக்கள்: அதேபோல, ட்விட்டர், யூடியூப் போன்றவற்றில் தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தொடர்பான 386 அவதூறு வீடியோக்களை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in