அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிய 3 மாணவர்கள்: உயிர் காக்க உதவிய ஐபோனின் அற்புத அம்சம்!

பிரதிநிதித்துவப் படம் | DALL·E 2 ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்
பிரதிநிதித்துவப் படம் | DALL·E 2 ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்
Updated on
1 min read

யூட்டா: அமெரிக்க நாட்டின் யூட்டா பகுதியில் அமைந்துள்ள வனத்தின் அடர்ந்த பகுதியில் சிக்கிய மூன்று மாணவர்களின் உயிரைக் காத்துள்ளது ஐபோனில் இடம்பெற்றுள்ள அம்சம். அங்கு என்ன நடந்தது? அந்த மாணவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதை பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மூலமாக பல்வேறு சமயங்களில் இதற்கு முன்னர் அதன் பயனர்களின் இன்னுயிரை காத்த செய்திகள் குறித்து நாம் கேள்விப்பட்டது உண்டு. அந்த வகையில் ஆப்பிள் சாதனத்தின் துணை கொண்டு அண்மையில் இந்த மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆப்பிள் ஐபோன் 14 அந்தப் பணியை இந்த முறை செய்துள்ளது.

யூட்டாவின் பள்ளத்தாக்கு பகுதிக்கு அந்த மூன்று மாணவர்களும் சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக அவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். வெப்பநிலை குறைந்த காரணத்தால் அதில் இருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிக்கிய அந்த இடத்தில் மொபைல் நெட்வொர்க் இணைப்பும் இல்லாத காரணத்தால் வெளி உலகை உதவி வேண்டி அவர்களால் தொடர்பு கொள்ள முடியாத கையறு நிலை.

அந்த மாணவர்களில் ஒருவர் ஐபோன் 14 பயன்படுத்தி வந்துள்ளார். அந்த போனில் மொபைல் நெட்வொர்க் மற்றும் Wi-Fi கவரேஜ் இல்லாத நேரத்தில் சாட்டிலைட் துணைகொண்டு அவசர உதவியை வேண்டும் எஸ்ஓஎஸ் தொடர்பை மேற்கொள்ள முடியும். அந்த அம்சத்தின் துணைகொண்டு அந்த மாணவர் அமெரிக்காவின் ‘911’ எண்ணுக்கு உதவி வேண்டி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதன் அடிப்படையில் மீட்புக் குழுவினர் அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்து, அந்த மாணவர்களை காத்துள்ளனர். இந்த சம்பவம் மனித வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in