ஐ மெசேஜ் உள்ளிட்ட அனைத்து மெசஞ்சர்களையும் உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன் செயலி: சன்பேர்ட்

ஐ மெசேஜ் உள்ளிட்ட அனைத்து மெசஞ்சர்களையும் உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன் செயலி: சன்பேர்ட்
Updated on
1 min read

சென்னை: ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு உதவும் வகையில் ‘ஐ மெசேஜ்’ உட்பட அனைத்து மெசஞ்சர்களையும் உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன் செயலியான் சன்பேர்ட் மெசேஞ்சர் செயலி இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. தற்போது இந்தச் செயலிக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அண்மையில் இதன் பயன்பாடுகள் குறித்து சன்பேர்ட் தரப்பில் விளக்கப்பட்டது.

ஆப்பிள் ஐபோன் பயனர்கள் மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தி வரும் ‘ஐ மெசேஜ்’ தளம் குறித்து அனைவரும் அறிந்திருக்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் மேக், ஐபோன், ஐபாட் மற்றும் வாட்ச்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். டெக்ஸ்ட் மெசேஜ், இமேஜ், வீடியோ, டாக்குமெண்ட், லொக்கேஷன் உட்பட அனைத்தையும் இதில் ஆப்பிள் சாதன பயனர்கள் பகிரவும், பெறவும் முடியும். இருந்தாலும் ஐ மெசேஜை மற்ற இயங்குதள (ஓஎஸ்) பயனர்களால் பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இதை பயன்படுத்தும் வகையில் சில செயலிகளும் உள்ளன.

இருந்தாலும் ஐ மெசேஜ், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் டைரெக்ட் மெசேஜ், எஸ்எம்எஸ், டெலிகராம், டிஸ்கார்டு, ஆர்சிஎஸ் மற்றும் ஸ்லாக் என பெரும்பாலான தளங்களின் மெசேஜ்களை அக்செஸ் செய்யும் வகையில் சன்பேர்ட் மெசேஞ்சர் செயலி அறிமுகமாகி உள்ளது. தற்போது இதன் பீட்டா வெர்ஷன் பயன்பாட்டில் உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் தேவைகளை அறிந்து இந்தச் செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இந்தப் பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்குகிறோம். ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டுகளுக்கு இடையேயான குறுஞ்செய்தியை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் பாதுகாப்பு அம்சத்தில் புதுமையை சேர்க்கிறது சன்பேர்ட். இது மற்ற ஒருங்கிணைந்த செயலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிற்க செய்கிறது” என சன்பேர்ட் மெசேஜிங் சிஇஓ டேனி மிஸ்ரஹி தெரிவித்துள்ளார். தற்போது இந்தச் செயலியை பெற விரும்பும் பயனர்கள் sunbirdapp.com தளத்திற்கு சென்று அதற்கான விஷ்லிஸ்டில் இணைய வேண்டி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in