Published : 31 Mar 2023 04:43 PM
Last Updated : 31 Mar 2023 04:43 PM

சைபர் தாக்குதல் அச்சுறுத்தலில் இந்திய அரசு வலைதளங்கள்: ஆய்வில் அலர்ட்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு வலைதளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தலில் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி சார்ந்து இயங்கி வரும் செக்யூரின் (Securin Inc.) மற்றும் இவன்டி (Ivanti) நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் இதனை அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பாஸ்வேர்டுடன் சுமார் 700-க்கும் மேற்பட்ட இந்திய அரசு தள பயனர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் கடந்த 2022-ல் கிடைத்ததாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஷிங் அட்டாக், கிரெடென்ஷியல் மிஸ் யூஸ், இம்பெர்சனேஷன் போன்ற தாக்குதலுக்கு இந்தத் தளங்கள் சிக்குவதாக தகவல்.

இந்திய மாநில அரசுகள் பயன்படுத்தி வரும் டொமைன்களில் சுமார் 10 சதவீதத்திற்கும் கூடுதலான தளங்கள் எஸ்எஸ்எல் எனப்படும் செக்யூர் சாக்கெட்ஸ் லேயர் என்கிரிப்ஷனை கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை இதில் மிக எளிதில் காட்ட முடியும் எனத் தெரிகிறது.

"2022-ல் இந்திய அரசு நிறுவனங்கள் அதிக அளவில் சைபர் தாக்குதலை எதிர்கொண்டது. இது வலைதள பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை புறந்தள்ள முடியாது என்பதை காட்டுகிறது. மேலும், இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவதையும் பார்க்க முடிகிறது” என செக்யூரின் இணை நிறுவனரும், தலைவருமான ராம் மொவ்வா தெரிவித்துள்ளார்.

“சைபர் பாதுகாப்புக்கான அடிப்படை தேவைகள் இல்லாத அரசு மற்றும் அமைப்புகளின் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தல் அதிகம் இருக்கக்கூடும். அதனால் இதில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். இந்த தளங்களை ரேன்சம்வேர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க நாங்கள் எங்கள் பார்ட்னருடன் இணைந்து இயங்குவோம்” என இவன்டியின் தலைமை ப்ராடெக்ட் அதிகாரி ஸ்ரீனிவாஸ் முக்கமலா தெரிவித்துள்ளார். ரேன்சம்வேர் அட்டாக் கடந்த 2019 உடன் ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஸ்பாட்லைட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x