

ஸ்ரீஹரிகோட்டா: ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள், திட்டமிட்டபடி விண்ணில் அதன் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த, அந்நிறுவனத்துடன் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. வணிக நோக்கிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்நிலையில், 2-வது கட்டமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் இன்று (மார்ச் 26) காலை 9 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
இந்த 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,805 கிலோ. இவை அனைத்தும் பூமியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் பகுதி பகுதியாக லாஞ்சரிலிருந்து பிரிந்து அதன் வட்டப் பாதையை அடைந்தன.