

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால், கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கெனவே இணைய கில்லாடிகள் பலர் நிருபித்துள்ளனர். இப்போது ‘பவர் அப்’ எனும் வளரும் நிறுவனம் இதை மீண்டும் நிருபித்துள்ளது. அதிநவீன காகித விமானங்களை உருவாக்கும் பவர் அப் நிறுவனம், இந்த விமானத்தை அப்டேட் செய்வதற்கான கோரிக்கையை கிக்ஸ்டார்ட்டரில் வைத்து கலக்கிக்கொண்டிருக்கிறது.
காகித விமானத்தில் அப்படி என்ன புதுமை செய்யமுடியும் என அலட்சியமாக நினைக்க வேண்டாம். காகிதத்தை அழகாக மடித்து விமானமாக்கி கையால் காற்றில் வீசி எறிந்து விளையாடிய அனுபவம் பலருக்கு இருக்கலாம்.
பவர் அப் என்ன செய்திருக்கிறது என்றால், சாதாரண காகித விமானத்தை இஞ்சினால் இயக்கி தானாகப் பறக்கும் விமானமாக மாற்றியிருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த விமானத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம் இதை ஸ்மார்ட்போன் வழியே கட்டுப்படுத்தவும் செய்யலாம். புளுடூத் வசதி வழியே இது செயல்படுகிறது. ரிமோட் கண்ட்ரோலால் இயங்கும் பொம்மை கார்போல இந்தக் காகித விமானத்தை ஒரு பத்து நிமிடம் பறக்க வைத்து விளையாடலாம்.
காகித விமானத்தை பறக்கவிட்டால் நேராகச்சென்று குப்புற கவிழ்ந்து விடும். இதை வைத்துக்கொண்டு நண்பர்களோடு யார் அதிக தூரம் எறிய முடிகிறது என போட்டிகூட வைக்கலாம். ஆனால், பவர் அப் நிறுவனம், காகித விமானத்தில் சின்னஞ்சிறிய இன்ஜினை பொருத்தி தானாகப் பறக்கும் ஆற்றலை அளித்திருக்கிறது.
இது புதுமையான முயற்சி என்றாலும் கொஞ்சம் காஸ்ட்லியானது. காகிதத்தில் பொருத்தும் சிறிய இன்ஜின் மற்றும் அதை இயக்கக்கூடிய பேட்டரியைத் தயார் செய்ய வேண்டும். இந்த அமைப்புக்கான ஸ்மார்ட்போன் செயலியையும் உருவாக்க வேண்டும். இதற்கு எல்லாம் முதலீடு தேவை. கைக்காசை போடலாம் அல்லது கடன் வாங்கலாம் என்றாலும், தயாரிப்புக்கு போதிய ஆதரவு இருக்குமா என்பது தெரியாது. இதுபோன்ற சோதனை முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதற்காகவே கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் இருக்கிறது.
கிரவுட்சோர்சிங் என சொல்லப்படும் இணையவழி நிதி திரட்டலுக்கான மேடையாக கிக்ஸ்டார்ட்டர் செயல்படுகிறது. புதுமையான ஐடியாவை கைவசம் வைத்திருப்பவர்கள் அதைச் செயல்படுத்திப் பார்க்க நினைத்தால், கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அதற்கான பக்கத்தை அமைத்து கோரிக்கை வைக்கலாம். ஐடியாவை விவரித்து அதை செயல்படுத்த எவ்வளவு நிதி தேவை என்பதை தெரிவிக்க வேண்டும். அந்த ஐடியாவால் கவரப்படும் இணையவாசிகள் நிதி அளித்து ஆதரவு தெரிவிக்கலாம். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப ஐந்து டாலரோ, பத்து டாலரோகூட கொடுக்கலாம். இப்படி மொத்த தொகையும் கிடைத்துவிட்டால், களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான். ஆதரவு தெரிவித்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்துவிட்டு, தயாரிக்கும் பொருளைப் பரிசாக அனுப்பி வைக்கலாம்.
இந்த முறையில் கிக்ஸ்டார்ட்டரில் நிதி திரட்டி வெற்றி பெற்றுக் கலக்கிய நிறுவனங்களின் பட்டியல் பெரியது. இந்த பட்டியலில்தான் பவர் அப் நிறுவனமும் இணைந்திருக்கிறது. சாதாரண காகித விமானத்தை பறக்கும் விமானமாக மாற்றும் எண்ணத்துடன் கிக்ஸ்டார்ட்டரில் கோரிக்கை வைத்து, அதற்கான நிதியை திரட்டுவதிலும் பவர் அப் நிறுவனம் வெற்றிபெற்றது. இது நடந்து ஆறு ஆண்டுகள் இருக்கலாம். ஸ்மார்ட்போனால் காகித விமானத்தை பறக்கவிடலாம் எனும் ஐடியாவால் கவரப்பட்ட நூற்றுக்கணக்கானோர் இதற்கு நிதி அளித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இப்போது இந்த நவீன காகித விமானத்தை மேலும் அப்டேட் செய்யும் எண்ணத்துடன் பவர் அப் மீண்டும் கிக்ஸ்டார்ட்டர் கதவைத் தட்டியுள்ளது. இந்த முறை காகித விமானத்தை மேலும் மேம்படுத்தியிருக்கிறது. விமானத்தில் சின்னஞ்சிறிய கேமிரா ஒன்றையும் பொருத்தியுள்ளது. அதனுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி என அழைக்கப்படும் மெய்நிகர் தன்மை கொண்ட கண்ணாடியுடன் இதை இணைத்துள்ளது. விமானம் பறக்கும்போது அதில் உள்ள கேமிரா படம் பிடிக்கும் காட்சிகளை விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனம் மூலம் பார்த்து மகிழலாம். அப்படியே விமானத்தை அப்படியும் இப்படியும் மாற்றிமாற்றி இயக்கலாம்.
ட்ரோன்கள் என சொல்லப்படும் ஆளில்லா விமானம்போல இந்த விமானத்தை தயாரிக்கத்தான் இந்த முறை பவர் நிறுவனம் நிதி கோரியுள்ளது. கேட்ட நிதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை ஏற்படும்வரை பலர் நிதி அளிக்க முன்வந்துள்ளனர். இந்த விமானம் செயல்படும் விதம் பற்றி விளக்கும் அருமையான வீடியோ ஒன்று இதன் கிக்ஸ்டார்ட்டர் பக்கம் மற்றும் நிறுவன இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது: https://www.poweruptoys.com/
நிதி அளிக்க முன்வருபவர்களுக்கு இந்தக் காகித ட்ரோன் விமானம் பரிசாக அனுப்பிவைக்கப்படும் என்பதோடு, சந்தையிலும் இது விற்பனைக்கு வர உள்ளது. விநோதமும் புதுமையும் இணைந்த ஐடியாக்கள் எப்படி கிக்ஸ்டார்ட்டர் மூலம் செயல்வடிவம் பெறுகின்றன என்பதற்கு இது நல்ல உதாரணம். அது மட்டுமல்ல, ஒரு புதுமையான ஐடியாவை எப்படியெல்லாம் அப்டேட் செய்து அசத்தலாம் என்பதற்கும் நல்ல உதாரணம்.
உங்கள் மனதிலும் இது போன்ற மின்னல் கீற்று ஐடியாக்கள் இருந்தால், கிக்ஸ்டார்ட்டர் பாணி இந்தியத் தளங்களில் முயன்று பார்க்கலாம்.
தளம் புதிது: எழுத உதவும் இணையதளம்
கம்ப்யூட்டரில் டைப் செய்ய வேர்ட் கோப்பு பரவலாக நாடப்பட்டாலும், இணையத்திலேயே எழுத உதவும் மென்பொருள் சார்ந்த தளங்களுக்கும் குறைவில்லை. அந்த வகையில் புதிதாக வந்திருக்கிறது எட்டர் (https://eddtor.com/editor ) இணையதளம். இதன் முகப்பு பக்கத்திலேயே டைப் செய்து அவற்றை கோப்பாக சேமித்துக்கொள்ளலாம். டைப் செய்யும்போது பின்னணியில் அந்தக் கால டைப்ரைட்டர் ஒலி கேட்பது சின்ன சுவாரசியம். இதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது. கோப்புகளைச் சேமிக்கலாம், வெளியிடலாம், மற்றவர்களுடன் பகிரலாம். கோப்புகளில் தேடும் வசதியும் இருக்கிறது. எழுதிய கோப்புகளில் எளிதாக திருத்தங்களையும் செய்யலாம்.
தகவல் புதிது: விக்கிபீடியாவை நாடும்
விஞ்ஞானிகள்மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல, விஞ்ஞானிகள் மத்தியிலும் கட்டற்ற களஞ்சியமாக விக்கிபீடியா பிரபலம். அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்தத் தகவலை ஓர் ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்து அவற்றை விக்கிபீடியாவில் வெளியிட்டுக் காத்திருந்தபோது, அதன் பிறகு சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அவற்றின் தாக்கம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, விக்கிபீடியாவில் தகவல்களை வெளியிடுவது ஏழை நாடுகளில் உள்ள ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
வீடியோ புதிது: போட்டோஷாப் பாடம்
அடோபின் போட்டோஷாப் மென்பொருளால் ஒளிப்படங்களை எண்ணற்ற வழிகளில் மேம்படுத்தலாம். இதற்கு உதவும் நூற்றுக்கணக்கான நுணுக்கங்கள் உள்ளன. படங்களில் உள்ள வண்ணங்களில் விளையாடுவது போட்டோஷாப் நுணுக்கங்களில் பிரபலமானது. இதற்கான ஐந்து பிரத்யேக வழிகளை ட்விட் யூடியூப் வீடியோ, சேனல் வீடியோ மூலம் அழகாக விளக்கியுள்ளது. அட்ஜெஸ்ட்மெண்ட் லேயரை பயன்படுத்துவது, பெயிண்ட் பிரெஷை இணைத்து பயன்படுத்துவது என வழிகள் உள்ளன. வீடியோவில் கற்க: https://www.youtube.com/channel/UCeR7U67I2J1icV8E6Rn40vQ