

உங்கள் மனைவியுடன் சாப்பிடுவதற்கு வெளியே செல்கிறீர்கள். நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து அந்த இரவு விருந்தை முழுமையாக அனுபவித்தீர்களா அல்லது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்ததால், மனைவியை சரியாக கவனிக்கவில்லையா? - இந்த கேள்விக்கு நீங்கள் சரியாக பதிலளிக்க முடியாமல் போகலாம். ஆனால், இதற்கான பதிலை ஆய்வாளர்கள் விளக்கி கூறுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், ஸ்மார்ட் போனை அதிகமாகப் பயன்படுத்துவதால், உங்கள் துணையின் முக பாவனைகள், நுட்பமான சைகைகள், உரையாடலின்போதுமாறும் தோரணைகள், அவர்களது குரல், கண் ஜாடை அசைவுகள் போன்ற சுவாரஸ்யமான தருணங்களை இழக்கிறீர்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே, மனைவியுடன் இரவு உணவு சாப்பிடும் தருணங்களில் ஸ்மார்ட் போனை அணைத்துவிட்டு, கண்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் உரையாடுவது நன்மை பயக்கும் என்று பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த ஆய்வில், கைபேசி பயன்பாடு என்ற தொழில்நுட்பத்தின் வருகைக்கு பின், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது குறைந்துவிட்டது என்றும், இதனால் தங்களது துணையின் குணங்களை புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கணவன் - மனைவி உறவில் ஆழம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்குமுன், நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டாளர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பதாக தெரிய வந்தது. மேலும், அவர்களுக்கு எளிதில் கவனச் சிதறலும், மனஅழுத்தமும் ஏற்படுவதாகவும் பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தன.
சமீபத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், தொழில்நுட்ப பயன்பாட்டால், தங்களது துணை தங்களை புறக்கணிப்பதாக பத்துக்கு ஒன்பது பேர் உணர்கிறார்கள்.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய ஆய்வில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இரவு விருந்து சாப்பிடும்போது, பெரும்பாலான பெற்றோர்களின் கவனம் தங்களது கைபேசியில்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரி, உங்கள் அனுபவம் எப்படி?