Bard AI செய்த பிழை: 100 பில்லியன் டாலர்களை கூகுள் இழந்தது எப்படி?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் Bard AI செய்த சிறு பிழை காரணமாக சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை பங்குச்சந்தையில் கூகுள் இழந்துள்ளது. இந்த பிழையால் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 9 சதவீதமாக குறைந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 100 பில்லியன் டாலர் என தகவல்.

அண்மைய காலமாக இணைய உலகை கலக்கி வருகிறது ChatGPT. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட்பாட் இது. இதன் உருவாக்கத்தில் பெருமளவு முதலீடு செய்து வந்தது மற்றொரு டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட். அதன் பலனை அனுபவிக்கும் விதமாக அண்மையில் மைக்ரோசாப்ட்டின் Bing தேடு பொறியில் சாட் ஜிபிடியை சேர்த்திருப்பதாக உலகிற்கு உரக்க சொல்லியது மைக்ரோசாப்ட்.

ஏற்கனவே சாட் ஜிபிடி வருகையால் கூகுளின் வருங்காலம் குறித்த விவாதம் எழுந்திருந்தது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் பிங்க் தேடு பொறியில் சாட் ஜிபிடியை சேர்த்தது கூகுளுக்கு அழுத்ததை கொடுத்தது. அதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூகுள் பொறியாளர்கள் கட்டமைத்த Bard AI சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டது. இது உரையாடல் சேவையை வழங்கும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது என சொல்லி கூகுள் அதை அறிமுகம் செய்தது. அதில் ஜெனரேட் செய்யப்பட்ட ஒரு கேள்விக்கான விடையை GIF வடிவில் கூகுள் பகிர்ந்திருந்தது.

அந்த கேள்விக்கு Bard AI அளித்த பதில்களில் ஒரு பதிலில் தவறான தகவல் இருந்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி குறித்த கேள்வி அது. அதற்கு சில விடைகளை Bard AI கொடுத்தது. “பூமியின் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தின் படத்தை முதன்முதலில் எடுத்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி” என சொல்லி இருந்தது. அதுதான் கூகுளுக்கு வில்லங்கத்தை சேர்த்தது.

ஆனால், கடந்த 2004-ல் ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பகத்தின் மிகப்பெரிய தொலைநோக்கி தான் அந்தப் படத்தை முதன்முதலில் எடுத்துள்ளது. இதை நாசாவும் உறுதி செய்துள்ளது. இந்த தவறான பதிலால் கூகுள், சந்தையில் சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in