

குருகிராம்: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குளிர்பான நிறுவனமான கோக கோலா களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனை தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிவிக்கும் டிப்ஸ்டரான முகுல் சர்மா ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
கொக கோலா நிறுவனம் குளிர்பானம் பிரிவு சந்தையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட் உடன் இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட் ரேஞ்ச் போன்களை கோக் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. தற்போது கசிந்துள்ள போனின் பின்புறம் கோக் நிறுவனத்தின் ட்ரேட்மார்க் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்த போனை பார்க்கும் போது ரியல்மி 10 ப்ரோ 4ஜி போனின் தோற்றத்தை நினைவுபடுத்துகிறது.
வழக்கமான பணிகளில் இருந்து சந்தையில் இருக்கும் டிமாண்டை பொறுத்து புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்க நிறுவனங்கள் எண்ணும். அந்த வகையில் கோக் நிறுவனமும் களம் இறங்கலாம். இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வர வேண்டியுள்ளது.