Published : 23 Jan 2023 08:11 PM
Last Updated : 23 Jan 2023 08:11 PM

பணி நீக்கத்தை தவிர்ப்பதில் தனி வழியில் ஆப்பிள் நிறுவனம் - எப்படி சாத்தியம்?

கோப்புப்படம்

பொருளாதார ரீதியிலான மந்தநிலை காரணமாக உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆயிரக் கணக்கில் கூண்டோடு பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த பணி நீக்க நடவடிக்கை உலக மக்கள் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு செய்தியாகவே மாறிவிட்டது. இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் இதுவரையில் பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுக்கவில்லை. அது குறித்து அறிவிக்கவும் இல்லை.

மற்ற நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வரும் சூழலில் ஆப்பிள் மட்டும் அதை தவிர்ப்பது எப்படி? தப்பிப்பது எப்படி? என்பதை பார்ப்போம். இது கார்ப்பரேட் அளவிலான செயல்பாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்தது என்ன? - கடந்த 2022 அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் செலவை குறைக்க வேண்டி சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார் எலான் மஸ்க். தொடர்ந்து மெட்டா நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.

அமேசான் தரப்பில் முதலில் சுமார் ஆயிரம் ஊழியர்களும், பின்னர் சுமார் 18 ஆயிரம் ஊழியர்களும் நீக்கப்பட்டனர். அண்மையில் கூகுள் நிறுவனமும் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது. இதே போல அமெரிக்க டெக் நிறுவனங்கள் மற்றும் இந்திய டெக் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன.

ஆப்பிள் தவிர்த்தது எப்படி? - ஆட்குறைப்பு நடவடிக்கையை பெரிய அளவில் கையில் எடுக்காத நிறுவனமாக ஆப்பிள் விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட வெகுசில ஊழியர்களும் சில்லறை வர்த்தகப் பிரிவில் பணி செய்தவர்கள் என தகவல். ஆனால், அந்த எண்ணிக்கை கூட அதிகபட்சம் 100-க்கு மேல் இருக்காது என சொல்லப்படுகிறது.

கடந்த 1997-ல் ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் தலைமை பொறுப்பை கவனித்த போது ஒரே நேரத்தில் சுமார் 4,100 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் அதிக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதற்கு முக்கியக் காரணம் 2020 முதல் 2022 வரையில் ஆப்பிள் நிறுவனம் ஊழியர்களை வேலைக்காக சேர்த்த நபர்களின் எண்ணிக்கை ஹைலைட்டாக சொல்லப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 7000 ஊழியர்களைதான் ஆப்பிள் புதிதாக வேலைக்கு சேர்த்துள்ளது.

அதுவே கூகுள், மெட்டா, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் அதிகளவில் இந்த காலகட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு புதிதாக வேலைக்கு ஊழியர்களை சேர்த்துள்ளது. கரோனா முடக்கம் காரணமாக பெருவாரியான மக்கள் ஆன்லைனில் இருந்தனர். அதனை கணக்கில் கொண்டு இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அந்த எண்ணிக்கையை அப்படியே அந்நிறுவனங்கள் குறைத்து வருவதாக தகவல். அதன் எதிரொலிதான் இது என சொல்லப்படுகிறது.

2020 முதல் 2022 வரையில் மைக்ரோசாப்ட் சுமார் 58 ஆயிரம் ஊழியர்களையும், அமேசான் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களையும், கூகுள் 21 ஆயிரம் ஊழியர்களையும், மெட்டா 13 ஆயிரம் ஊழியர்களையும் பணிக்கு சேர்த்துள்ளது.

இதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனமோ மொத்தமாக உள்ள 1.64 லட்ச ஊழியர்களில் வெறும் 6 சதவீத எண்ணிக்கையில்தான் புதிதாக ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளது. இருந்தாலும் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் ஆப்பிளின் காலாண்டிற்கான வருவாய் குறித்த விவரம் வெளியாகும் போது ஆட்குறைப்பு நடவடிக்கை உள்ளதா என்பது தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x