Published : 21 Jan 2023 12:35 AM
Last Updated : 21 Jan 2023 12:35 AM

12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கூகுள் - முழு பொறுப்பு ஏற்பதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் ஊழியர்கள் இதன்மூலம் வேலை இழக்கின்றனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும்.

பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள தகவலில், "உங்களிடம் பகிர்ந்துகொள்ள சில கடினமான செய்திகள் உள்ளன. கூகுள் நிறுவன பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். வேலையை இழக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஏற்கனவே தனிபட்ட வகையில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்.

மற்ற நாடுகளில் உள்ள பணியாளர்களுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை நீண்ட நேரம் எடுக்கும்.

பணிநீக்கம் மூலம் திறமைமிக்க சில நபர்களிடமிருந்து நாங்கள் விடைபெறுகிறோம். இந்த முடிவுகளுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் வியத்தகு முன்னேற்றம் கண்டது. அந்த முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், இன்றைய பொருளாதார சூழ்நிலையால் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை வந்துள்ளதால் இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x