

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்போது தொழில்நுட்ப உலகில் அதிகம் பேசப்பட்டு வருகிறது ChatGPT. டிசம்பர் 1 முதல் இது பொதுவெளியில் பீட்டா டெஸ்டிங் பயன்பாட்டுக்கு கிடைத்து வருகிறது. அறிமுகமான ஒரே வாரத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களை இந்த பிளாட்பாரம் கடந்துள்ளதாக தகவல். வரும் நாட்களில் இது கூகுளுக்கு மாற்றாக இருக்கும் என்ற ஊகங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. அப்படியே அது எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் மாற்றாக அமையலாம் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ChatGPT என்றால் என்ன? இதை பயன்படுத்துவது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.
ChatGPT? - இதுவோ சாட்பாட்-களின் காலம். அந்த வகையில் ChatGPT தொழில்நுட்ப சாதனங்களின் பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட். இதனை ஓபன் ஏஐ எனும் ஆய்வக நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர்.
இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும். வாழ்வில் எப்படி ஸ்மார்ட்டாக இருப்பது?, மனிதத்துவம் மிக்க ஒரு கதையை சொல்ல, கட்டுரை படிக்க என பயனர்கள் கேட்கும் சகல கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும்.
அனைத்து பதில்களும் டெக்ஸ்ட் பார்மெட்டில் இருக்கும். இருவருக்குள் நடைபெறும் உரையாடல் போலவே அது அமையும் என்பது ஹைலைட். இங்கு பயனர் மற்றும் சாட்பாட்தான் இடையில்தான் உரையாடல் இருக்கும். கிட்டத்தட்ட நிதி அல்லது வங்கி சார்ந்த தளங்களில் உள்ள பாட்கள் பயனர்களுக்கு பதில் கொடுக்கும் அல்லவா அது போலதான் இதுவும் இயங்குகிறது.
ChatGPT, பயனர்களுக்கு கொடுக்கும் தகவல்கள் விரிவாகவும், எளிமையாகவும் இருக்கும். உண்மையான அசல் தகவல்கள், தத்துவம் மற்றும் கணிதம் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை இதனால் வழங்க முடியும். சிக்கலான தலைப்புகளையும் எளிய வாக்கியங்களின் மூலம் விளக்கிவிடும். மொழிபெயர்க்கவும் செய்யும். தமிழ் மொழியிலும் பயன்படுத்தலாம். ஆனால், இப்போதைக்கு அதற்கான வேலைகள் தொடக்க நிலையில் இருப்பதை பயன்படுத்தியதன் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.
அதே போல நிகழ் நேரத்தில் நடைபெறுவது குறித்த தகவலை இதனால் வழங்க முடியாது. நிதி சார்ந்த ஆலோசனைகள் இதில் கிடைக்காது. இதை தவிர எதை வேண்டுமானாலும் CHATGPT-ல் பயனர்கள் கேட்கலாம். தற்போது பொது வெளியில் பயன்பாட்டுக்கு கிடைப்பது ஆய்வு அடிப்படையிலான வெளியீடு என்பதால் சமயங்களில் தவறான தகவல்கள் இதில் கிடைக்கலாம் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
இதை பயன்படுத்துவது எப்படி? - பயனர்கள் இதன் சேவையை முற்றிலும் இலவசமாக இப்போதைக்கு பயன்படுத்தலாம். இது ஆய்வு பதிப்பு வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் ஓபன் ஏஐ தளத்திற்கு சென்று அதில் உள்ள Try ChatGPT லிங்க் மூலம் இதனை பயன்படுத்தலாம். இதற்கு குரோம், கூகுள், Firefox என எந்த பிரவுசரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
பயனர்கள் தங்களது மின்னஞ்சல் மூலம் புதிதாக ஓபன் ஏஐ கணக்கு தொடங்கி பயன்படுத்தலாம். அல்லது ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் கணக்கு மூலமாகவும் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ், விண்டோஸ் மற்றும் இணையதள அக்சஸ் கொண்ட சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
கூகுளுக்கு மாற்றாகுமா? - இது தானியங்கு முறையில் டெக்ஸ்ட்களை உருவாக்கும் தன்மை கொண்ட ஏஐ. Generative Pre-Trained Transformer (GPT) என்ற அண்மைய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இப்போதெல்லாம் நமக்கு ஏதேனும் பதில் வேண்டுமென்றால், சந்தேகம் என்றால் கூகுள் துணையை நாடுகிறோம். இனி ChatGPT-யை நாடும் காலமும் அமைந்துள்ளது.